யூன் 12 திகதி நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்- ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள்.

(பாறுக் ஷிஹான்) சுபோதினி என்ற அறிக்கை   ஊடாக   வழங்கப்பட்ட வாக்குறுதியை உடனடியாக அமுல்படுத்தி சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி  எதிர்வரும் ஜுன் மாதம் 12 ஆந் திகதி சகல ஆசிரியர்கள் அதிபர்களும்  போராட தயாராக வேண்டும் என  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(9) மாலை விசேட செய்தியார் சந்திப்பு ஒன்றினை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது அல் -கமரூன் வித்தியாலயத்தில் நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
மேலும் அங்கு தெரிவிக்கப்பட்டதாவது
சகல கல்வி வலயங்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்படவுள்ள அதிபர் ஆசிரியர்களின் ஒன்று கூடிய போராட்டமானது ஏன் நடாத்தப்படுகின்றது என்பது தொடர்பில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும்.ஏனெனில் நாங்கள் கேட்பது சம்பள அதிகரிப்பு அல்ல.சம்பள முரண்பாடு.சுமார் 27 வருடங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தான் எமது ஆசிரியர்கள் அதிபர்களை இவ்விடயத்தில் ஏமாற்றி வந்துள்ளது.இந்த விடயங்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.அதிகார வர்க்கங்களினால் அவ்வப்போது நசுக்கப்பட்டு வந்திருக்கின்றோம்.இதன் ஊடாக 2021 ஆண்டு எமது போராட்டத்தின் விளைவாக  சுபோதினி என்ற அறிக்கை உருவாக்கப்பட்டு அதன்  ஊடாக எமக்கு உரிய சம்பள உயர்வினை தருவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.இதனை யாவரும் அறிந்த உண்மையாகும்.அந்த வேளையிலும் சுபோதினி அறிக்கையினை நாம் ஏற்றுக்கொள்ள வில்லை.
எனினும் மாணவர்களின் கல்வியின் நலனில் அக்கறை கொண்டு இந்த அறிக்கையினை ஏற்றுக்கொண்டோம்.எனினும் இவ்வறிக்கையின் ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதி  தவிர்க்கப்பட்டு இன்று வரை நாங்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றோம்.குறிப்பாக கூறப்போனால் மத்திய வங்கியில் கடமையாற்றும் ஒரு இலிகிதரின் சம்பளத்தை கூட 35 வருடங்கள் கடமையாற்றுகின்ற அதிபர் மற்றும் ஆசிரியரால் இன்று வரை பெற முடியவில்லை.இந்த நிலை இலங்கையில் தொடர்கதையாகவே உள்ளது.எனவே சுபோதினி அறிக்கை ஊடாக எழுத்து மூலமாக எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை தாருங்கள் என வலியுறுத்தி எதிர்வரும் ஜுன் மாதம் 12 ஆந் திகதி சகல ஆசிரியர்கள் அதிபர்களும்  கல்வி வலயங்களுக்கு முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்.
இந்த அரசாங்கத்திற்கு எமது பலத்தை காட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இனியும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை என்பதை அரசாங்கத்திற்கு எடுத்து கூற வேண்டும்.அவ்வாறு இல்லாவிடின் அடுத்து வரும் ஜுன் மாதம் 26 ஆந் திகதி நாடு பூராகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு பாடம் புகட்டப்படும் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றோம்.அத்துடன் அகில இலங்கை ரீதியாக 3/2 சம்பள போராட்டத்தை முன்னெடுப்பதற்கு 101 வலயக்கல்வி அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டம் இடம்பெறும் என குறிப்பிட்டனர்.
குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக  இலங்கை ஆசிரியர் சேவை சங்க உப செயலாளர் ஏ.ஆதம்பாவா, இலங்கை ஆசிரியர் சேவை சங்க அம்பாறை மாவட்ட  செயலாளர் எம்.எஸ்.சத்தார், இலங்கை ஆசிரியர் சேவை சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் எஸ்.எம் ஆரிப், இலங்கை ஆசிரியர் சேவை சங்க கல்முனை கல்வி வலய செயலாளர் எம்.எஸ்.எம் சியாத் ,இலங்கை ஆசிரியர் சங்க கல்முனை கல்வி வலய இணைப்பாளர் ஏ.எம்.எம்.சாஹிர், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.