தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறதுஎன்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது.

தமிழர் தலைநிமிர் காலம் என்ற தொனிப்பொருளில் சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில்  கடந்த 3 நாட்களாக கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற  13வது உலகத்தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மகாநாடு  சுவிஸ் நாட்டுக்கு தமிழர் அகதிகளாக வந்து 44 ஆண்டுகள் பூர்த்தியான நிகழ்வூட்டல் நினைவுடன் இனிதே  நிறைவு பெற்றது.

இம்மகாநாட்டில் உலகின் 27 நாடுகளிலிருந்து 550ற்கு மேற்பட்ட தமிழ் தொழில்முனைவோரும் திறனாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மகாநாட்டின்போது உலகப்பொருளாதாரம், இயற்கைச்சூழல், தற்போதைய தொழில்நுட்பம், வியாபார முயற்சிகள், தொடர்பாடல், இலங்கை சிவில் சமுகத்தின் வாழ்க்மைமேம்பாடு போன்ற பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

நிகழ்வின்போது பல்வேறு திறமையாளர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ,இலங்கையின் வடகிழக்கு மலையகப்பிரதேசங்களிள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளதாக  மாகாநாட்டின் ஏற்பாட்டாளர்களான  The Rise எழுமின் அமைப்பினர் தெரிவித்தனர்.

கண்ணாரக் கண்டோம் – தமிழர் ஒற்றுமையின் வெற்றியை. சுவிட்சர்லாந்து Davos நகரில் நாங்கள் நின்று வென்று மகிழ்கிறோம். தமிழர்கள் நாங்கள் பெரிதாக உயர்வோம் என்ற நம்பிக்கை தூரத்து வெளிச்சமாய் தெரிகிறது.

கருமேகங்கள் சூழ்கையில் ராசாளிகள் பதறுவதில்லை. அவை கருமேக வானுக்கு மேலே பறக்கின்றன. இடர் வரும் காலை நாங்களும் இடறுவதில்லை. உணர்வில், உறுதியில் நாங்களும் தமிழ் ராசாளிகள். இறைவன் எம்மோடு. இயற்கை எம்மோடு. அறம் எம்மோடு. அன்பும் நட்பும் எம்மோடு. அன்னைத் தமிழ் எம்மோடு. எமது தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறது. இனி நாங்கள் நம்பிக்கையுடன் முன் செல்வோம். The RISE எழுமின் அமைப்பின் 13-ம் உலக மாநாடு Davos நகரில் இனிதே நிறைவுற்றது! 27 நாடுகள்; 550 உறவுகள்; பல நூறு தொழில் வணிகக் கதைகள். நாளை நமதே!! எல்லோருக்கும் நன்றி என The RISE Global நிறுவனர் – தலைவர் தமிழ்ப்பணி  வணபிதா ம. ஜெகத் கஸ்பர் அடிகளார் தனது நன்றியறிதலில் தெரிவித்துள்ளார்.