கிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட போட்டியில் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச அணி சாதனை.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச அணி வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது.

48வது தேசிய விளையாட்டு விழாவிற்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் ஒர் அங்கமான கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கால்ப்பந்தாட்டத்திற்கான இறுதிப்போட்டி மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச  அணியினருக்கும் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச அணியினருக்குமிடையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த (05) திகதி இடம்பெற்றது.இறுதிப்போட்டியில் களமாடிய இரண்டு அணிகளும் கோல்கள் எதுவும் போடாத நிலையில் தண்ட உதை மூலம் 5 இற்கு 4 எனும் கோல்கள் அடிப்படையில் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச அணியினர் வெற்றியை தமதாக்கி கொண்டனர்.

கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்ற  நிகழ்விற்கு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் என்.சந்தியானத்தி, மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராசா உள்ளிட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பிரமுகர்கள் என பலருர் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற திருகோணமலை தம்பலகாமம் பிரதேச அணியினர் யாழ்பாணத்தில் இடம் பெறவுள்ள தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.