வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் சூழல் சுற்றாடலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.பிரதேச உதவிச் செயலாளர் அர்ச்சனா

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் சூழல் சுற்றாடலைப் பேணிப்  பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக கோறளைப்பற்று வாகரைப் பிரதேச செயலக உதவிச் செயலாளர் அர்ச்சனா புவேந்திரன் தெரிவித்தார்.

உலக சுற்றாடல் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் வாகரைப் பிரதேச செயலகத்தின் பொது அமர்வு மண்டபத்தில் சூழல் சுற்றாடல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார்  தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் பிரதேச செயலக, பிரதேச சபை அலுவர்கள்,  பொதுமக்கள், கிராம மட்டக் கூட்டுறவுச் சங்கங்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சூழல் சுற்றாடல் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு சூழல் சுற்றாடலைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதேச உதவிச் செயலாளர் அர்ச்சனா, சுற்றுச் சூழல் தினத்தில் மட்டுமல்லாமல் எப்பொழுதுமே சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில், நீண்ட காலப் பயன் தரும் மரங்களை நாட்டி அவற்றைப் பராமரித்துப் பாதுகாத்தல், திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம், கிரமமான சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச் சுழலைப் பாதுகாப்பதென்பது தனிநபர்கள், குடும்பம் சமூகம் என்று தொடங்க வேண்டும்.  இத்தைய பணிகளைச் செய்வதற்கு சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் இளைஞர் அபிவிருத்தி அகம் அதிக கரிசனை கொண்டு தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது” என்றார்.

அங்கு கருத்துத் தெரிவித்த இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ. திலீப்குமார், சூழலைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், இயற்கைச் சூழலைப் பேணுவதற்கும் மக்கள் போஷணைச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கும், உணவுப் பஞ்சத்தைக் குறைப்பதற்கும் நஞ்சுள்ள உணவுகளைத் தவிர்ப்பதற்கும் உதவும்”. என்றார்.

இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ. சுதர்ஷன் வாகரைப் பிரதேச சபை வருமானப் பரிசோதகர் ஏ.எம். நௌபர் கிராம அலுவலர்கள் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் பெற்றோர் உட்பட அதிகாரிகளும் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் வெளிக்கள அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

சூழல் சுற்றாடல் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக வாகரை மகா வித்தியாலய வளாகத்தில் கனிதரும் மரங்கள் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நாட்டுவிக்கப்பட்டன.