( சோபிதன்) “நில மறுசீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை” எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ் வருடத்துக்கான தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ” பிளாஸடிக் கழிவு முகாமைத்துவம்”எனும் தலைப்பின் கீழ் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவனியானது பிரதேச செயலக முன்றலிலிருந்து ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அலுவலக உத்தியோகத்தர்களினால் பொலித்தீன் பாவனையினால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாதைகளை தாங்கிய வண்ணம் நடைபவனியானது களுவாஞ்சிகுடி பேருந்து நிலையம் மற்றும் பொதுச்சந்தையினை சென்றடைந்து, துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
200க்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் இந்த நடைபவனியில் கலந்து கொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்லாறு சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை நிகழ்வானது பெரியகல்லாறு கடல்நாச்சி அம்மன் ஆலய வளாகத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் கடல்நாச்சி அம்பாள் ஆலய நிருவாகத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.