நாவிதன்வெளிப் பிராந்திய முதலாவது மருத்துவத்துறை மாணவன் அபினேஸூக்கு பாராட்டு.

( வி.ரி.சகாதேவராஜா)   நாவிதன்வெளி கோட்ட வரலாற்றில் முதல்முறையாக   வைத்திய துறைக்குத் தெரிவாகிய  நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய (தேசிய பாடசாலை)  மாணவன் செல்வன் துரைரத்னம் அபினேஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகத்திற்கு தெரிவான பத்து மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
மாணவன் அபினேஸின் வரலாற்று சாதனையை அறிந்த புதிய சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், பதவியேற்று மறுநாளே அங்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக புதிய பணிப்பாளர் மகேந்திரகுமார் சம்மாந்துறை அல் மல்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கும் கன்னி விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய மாணவன் துரைரத்தினம் அபினேஸ்
2ஏபி பெற்று வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவாகியுள்ளார்.
இது இப் பாடசாலையின் 88 வருடகால வரலாற்றில் முதல்  மருத்துவ துறைக்கு செல்லும் சாதனையாகும்.
மாணவன் அபினேஸ் மற்றும் பல்கலைக்கழகம் செல்லும் பத்து மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் திடீர் நிகழ்வு வித்தியாலய அதிபர் எம்.தர்மலிங்கம் தலைமையில் நேற்று  (4) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பணிப்பாளருடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான பி.பரமதயாளன், எச்.நைரூஸ்கான் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
பிரதி அதிபர் திருமதி பிரியசாந்தினி மோகன் வரவேற்புரை நிகழ்த்த நிகழ்ச்சியை சிரேஸ்ட ஆசிரியர் என்.கோடீஸ்வரன் தொகுத்தளித்தார்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவி இராசமாணிக்கம் பிரணவி தனது கற்றல் அனுபவத்தை மிகவும் உருக்கமாக எடுத்துரைத்தார். பலரும் நெகிழ்ந்து போனார்கள்.
மேலும் அதிபர் முன்னாள் அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாணவனின் தந்தை துரைரத்னம்( மதி) தமது நன்றிகளைத் தெரிவித்துரையாற்றினார்.