முதலாளிமார்களை போஷிப்பதை விடுத்து விவசாயிகளை போஷிக்கும் யுகத்தை உருவாக்குவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இன்று சோறு போடும் விவசாயியின் நெல் முதலாலிமார்களுக்கு வழங்கப்பட்டு, முதலாளிமார்கள் போஷிக்கப்பட்டு வரும் செயற்பாடு நடந்து வருகிறது. இந்த ஏகபோகத்தை உடைத்து, விவசாயிக்கு வளமான சமகாலத்தையும், எதிர்காலத்தையும் உருவாக்கி, விவசாயியை மையமாக வைத்து கிராமம், நகரம், நாட்டைக் கட்டியெழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடன் மீளச்செலுத்த முடியாத மோசடி மிக்க வியாபாரிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மோசடி மிக்க வியாபாரிகள், பணக்காரர்களின் பக்கமல்லாது விவசாயினதும் சாதாரண மக்களினதும் நலன்களின் பக்கம் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் விவசாயிகள் பெற்ற கடன்கள் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயி பாதுகாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட விவசாயிகள் மாநாடு இன்று(02)  திருகோணமலை கந்தளாய் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

🟩விவசாயிகளின் நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்னெடுக்க ஜனாதிபதி செயலணி

உலக விவசாயம் பன்முக ரீதியாக வளர்ச்சி கண்டு வரும் நிலையில், எமது நாட்டிலுள்ள விவசாயி நாளுக்கு நாள் ஏழ்மை நிலைக்கு ஆளாகி வருகிறார். விவசாய துறைக்கான, திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், அதிகாரிகள் இருந்தும் விவசாயத்துக்கு முறையான தேசிய கொள்கை இல்லாததே இத்துறை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாட்டின் விவசாயத்தை அபிவிருத்தி செய்வதற்கு விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபித்து, மாவட்ட மட்டத்திலும், கமநல மத்திய நிலையங்கள், விவசாய அமைப்புகள் மட்டங்களிலும் விவசாயியை முன்னேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைவரினதும், நாட்டு மக்கள் அனைவரினதும் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். கோட்டாபய ராஜபக்ச எடுத்த ஒருதலைபட்சமான தீர்மானத்தால் விவசாய விளைச்சலும் விவசாய உற்ப்பத்திகளுக்கான விலைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

🟩 விவசாய நிலங்களில் இருந்து டொலர்களை ஈட்டும் யுகத்தை உருவாக்குவோம்.

விவசாய நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். உற்பத்தித் தரத்தை உயர்த்தி, விவசாயப் பொருட்கள் நாட்டில் நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுவது போல, ஏற்றுமதி விவசாயத்துக்கு இட்டுச்சென்று, விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏற்றுமதி மூலம் வருமானம் பெற்று டொலர்களை ஈட்டும் சூழல் உருவாக்கித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை.

பெரும் விளைச்சலை ஒரே நேரத்தில் சந்தையில் போடாமல், விலையைக் குறைக்காமல் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு நியாயமான விலையும் கிடைக்கும் வகையில் முறையான சேமிப்பு களஞ்சிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இதுதவிர, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி களைநாசினி தெளிக்கும் திட்டத்தையும், பயிர்ச்செய்கை அறிவுறுத்தல்களை கையடக்கத் தொலைபேசி வழியாக பெற்று, பயிர்களை விற்பனை செய்யக்கூடிய பொதுவான விவசாயப் பயன்பாட்டு முறையையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 விவசாயிகளுக்காக பிரத்தியேக வங்கி

விவசாயிகளுக்கு சரியான மூலதன அணுகலைப் பெறுவதற்கு நிதி வசதிகளுடன் கூடிய வங்கிக் கட்டமைப்பு உருவாக்கப்படும். தேசிய நிலப் பயன்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு யானை – மனித மோதலை குறைக்க புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். பயிர் சேதத்திற்கு பயிர் இழப்பீட்டு முறைகள் மற்றும் சொத்து சேதத்திற்கு புதிய காப்பீட்டு முறைகளை அறிமுகப்படுத்துவோம். இதன் ஊடாக விவசாயிகளைப் பலப்படுத்துவோம்.

🟩 தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்கப்படும்.

அழிந்து வரும் விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.  நமது ஏற்றுமதி பயிர்களுக்கு சர்வதேச சந்தையை இழந்து வருகிறோம்.  இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு விவசாயத்தை முன்னேற்க இரசாயன உரங்கள் தேவை.  நெல், மரக்கறிகள், பழங்கள், ஏனைய பிரதான பயிர்கள், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் ஏற்றுமதி பயிர்களுக்கு உரங்கள் தேவை. சகல பயிரின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வப்போது உரம் இட வேண்டியிருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி இந்த உரத்தை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கும். விவசாயிகள் எதிர்நோக்கி வரும் அவல நிலையை முடிவுக்குக் கொண்டு வருவோம்.

🟩சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உரிமைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்நின்றது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கிய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பலர் இவர்களை மறந்துவிட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை மறந்துவிடவில்லை. இவர்களுக்கு 30 இலட்சம் ரூபா வழங்கி ஓய்வூதியம் இல்லாமல் சேவை நீக்கம் செய்ய அரசாங்கம் எடுத்த திட்டத்தை பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியே அதனை தோற்கடித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியனால் இன்று கந்தளாய் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய மாநாட்டில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

இதில், திருகோணமலை மாநகர சபையின் உறுப்பினராகவும், கிழக்கு மாகாண சபையின் உப தவிசாளராகவும், கிழக்கு மாகாண சபையின் இளைஞர் விவகார, சிறுவர் அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள், காணி, மாகாண முன்பள்ளி அபிவிருத்தி, கலை கலாசார அலுவல்கள் அமைச்சராக கடமையாற்றியவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக பணியாற்றிய திருமதி ஆரியவதி கலப்பதி தலைமையிலான பிரதேச மட்ட பிரமுகர்கள் பலர் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் இணைந்து கொண்டனர்.

அவ்வாறே, முன்னாள் அமைச்சர் M.K.D.S. குணவர்தன அவர்களின் புதல்வர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சேருவில தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் நளின் குணவர்தன, குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.எஸ்.எம். சாஜித், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.சலீம் மற்றும் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் கூட்டணி உறுப்பினர் எஸ். பரமேஸ்வரம் ஆகியோரும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில்  இணைந்து கொண்டனர்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் தலைவியும், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினருமான திருமதி சீதா ரஞ்சனி அவர்களும் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.