மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 27 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியவர்கள்

( கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் 27 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கம்பி வேலியடைத்து கையகப்படுத்திய 8 பேருக்கும் எதிராக நீதிமன்ற கட்டளைக்கமைய அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அடைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி காணிகளை மீட்கும் நடவடிக்கை  வியாழக்கிழமை (30) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு சொந்தமான திராய்மடு பிரதேசத்திலுள்ள 27 ஏக்கர் 10 பேச் கொண்ட அரச காணியை கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் ஈடுபட்டுவரும் 8 பேர் காணியை சுற்றி கம்பி வேலிகள் நாட்டி அங்கிருந்த சில மரங்களை வெட்டி தமது காணி என சொந்தம் கொண்டாடி அபகரிப்பில் ஈடுபட்டுவந்தனா.;

இந்த நிலையில் குறித்த இந்த அரச காணியை சட்டவிரோதமாக அபகரித்தவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு பிரதேச செயலாளர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணைக்காக  வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  முன்னிலையில் எடுக்கப்பட்டபோது நீதவான் குறித்த அரச காணியை அபகரித்தவர்களை உடன்வெளியேற்மாறும் அடைக்கப்பட்ட கம்பிவேலிகளை அகற்றி காணியை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கட்டளை ஒன்றை பிறப்பித்தார்.

இந்த நீதிமன்ற கட்டளையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைக்கு அமைய நீதிமன்ற பதிவாளர் பிரதேச செயலாளர். அதிகாரிகள் உள்ளிட்டோர் பொலிசாருடன் உடன் சென்று சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றி  காணியை ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.