காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முடிவினை தரும் வரைக்கும் போராட்டம் தொடரும்

(வாஸ் கூஞ்ஞ)

நாங்கள் இப்பொழுது கேட்டு நிற்பது எங்கள் பிள்ளைகள் எங்கே என்பதுதான். சர்வதேசம் எங்களுக்கு இதற்கான முடிவினை தரும் வரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும் மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் வலியுறுத்து.

மன்னார் மாவட்டத்தின் காணாமல் ஆக்கப்பட்ட உறவகளின் சங்கம் வியாழக்கிழமை (30.052024) அன்று மன்னார் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியது.

இதன்போது அதிகமான பெண்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது தாய்மார் மற்றும் உறவுகள் தங்கள் கரங்களில் ஏந்தியிருந்த பதாதைகளில்

‘அரசே உங்களிடம் சரணடைந்த எம் உறவுகள் எங்கே?’ ‘ஓஎம்பி நம்பிக்கை இல்லை. ஓஎம்பி வேண்டாம்.’ ‘சர்வதேச விசாரணை வேண்டும்’ :வெள்ளை வேனில் கடத்தப்பட்ட எம் உறவுகள் எங்கே?’ என காணப்பட்டன.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவகளின் சங்கத்தின் சார்பாக திருமதி உதயச்சந்திரா இங்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கையில்

அரசாங்கமானது உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும்போது அரசானது தங்கள் பாதுகாப்பு படைகளையும் தங்கள் இனத்தையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே காணப்படுகின்றது.

எங்கள் வீடுகளிலிருந்து எங்கள் கண்முன்னே படைகளால் அழைத்துக் கொண்டு சென்ற எங்கள் பிள்ளைகளுக்காகவே இன்று (30) நாங்கள் இந்த இடத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் உறவினர்களுக்காக போராடிக் கொண்டு நிற்கின்றோம்.

நாங்கள் இறந்த பிள்ளைகளுக்காக போராடவில்லை. மாறாக எங்களிடமிருந்து அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளைகளுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்றோம். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தது இந்த அரசு.

அப்பொழுது உலக நாடு புதினம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. இருந்தும் நாங்கள் இன்று சர்வதேச நாடுகளிடம் கேட்டு நிற்பது எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இந்த 15 வருடங்களாக எங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது.? எங்கும் இவர்களை ஒழித்து வைத்திருக்கின்றார்களா? இதைத்தான் நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

எங்கள் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஏமாத்து வித்தையாகவே காணப்படுகின்றது.

ஒவ்வொரு மனித ஆணைக்குழுவும் எங்களுடைய துன்பங்களையும் வேதனைகளையும் அறிந்து செல்வதிலேயே அக்கறைக் காட்டுகின்றனர்.

ஆனால் என்ன நடக்கின்றது என்பதே எமக்குத் தெரியவில்லை. வடக்கு கிழக்கில் மனித உரிமையே கிடையாது.

மனித உரிமைய இல்லாத நாட்டில்தான் நாங்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எங்களுக்கு இங்கு எந்தவிதமான சுதந்திரமும் கிடையாது.

நாங்கள் இப்பொழுது கேட்டு நிற்பது எங்கள் பிள்ளைகள் எங்கே என்பதுதான். சர்வதேசம் எங்களுக்கு இதற்கான முடிவினை தரும் வரைக்கும் எங்கள் போராட்டம் தொடரும் என்பது மட்டும் உண்மை என இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.