வைரமுத்து எங்கள் சொத்து

வைரமுத்து எங்கள் சொத்து

மொழியா இசையா என்று முழக்கமிட்டு
போராட்டம் நடக்கும் இவ்வேளையில் இந்தப் பதிவு முக்கியம் என கருதுகிறேன்

ஞாயிறின்றி திங்களுக்கு ஒளியில்லை
கடலின்றி அலையில்லை
மூச்சின்றி பேச்சில்லை
தமிழின்றி இனிமையில்லை
நீலநிறமின்றி வானில்லை
மொழியின்றி முழுமையான இசையில்லை
குயிலின் பாட்டும்
புல்லாங்குழலின் இசையும்
நாதஸ்வரத்தின் ஓசையும்
மிருதங்கத்தின் ஒலியும்
காற்றோடு கலந்துவர
காதுக்கு இனிமை
சிந்தைக்குச் சிறப்பு
மறுப்பில்லை
நற்றமிழுடன் நல்லிசை
அமைந்தால்தான்
நடராஜரே நடனமாடுவார்
இல்லையெனில்
நாகம்தான் நர்த்தனமாடும்.
புகழ் பெற்ற எமது
இதிகாசங்களும் புராணங்களும்
காப்பியங்களும் . மொழியால்
மட்டுமே மெருகேறியிருக்கின்றன
தமிழ்த்தாயின் தலைமகன் வள்ளுவன்
இளையமகன் நீ
வள்ளுவன் தன் குறளால்
கடல்போல் பரந்து விரிந்து நிற்க
நீயோ உன் தமிழால் வானளவு
உயர்ந்து நிற்கின்றாய் .
வசைபாடும் வஞ்சகர்கள்
வானவில்லுக்கு சாயம் பூச
நீயோ மௌனம் காக்கின்றாய்
கலங்காதே கணிசமான
புலம்பெயர்தமிழர்கள் .
உன்பக்கமே
ஏனென்றால் நீ எங்கள் சொத்து.

கருத்தாழமிக்க கவிதைகளில்
கம்பனையே விஞ்சி நிற்கின்றாய்.
மகாகவி காளிதாசனும்.
பாரதியும் பாரதிதாசனும் இன்றிருந்தால்
உனக்கு மகுடம் சூட்டியிருப்பார்கள் .
இலக்கியத்திலே நீ கிரேக்கத்து ஹோமரையும் .
வங்கத்து தாகூரையும்
பல இலக்கிய மேதைகளையும்
புறந்தள்ளி முன் நிற்கின்றாய் .
ஏனென்றால் இவர்கள் யாரும்
மூன்றாம் உலகப்போர் எனும்
அறிவியல் காவியத்தை படைக்கவில்லை.
அழுக்காறு மிகுந்த
இந்தச் சமூகத்திலே
அடிக்கடி நீ காயப்படுத்தப்படுகிறாய் .
எனென்றால்
வழித்தேங்காயை எடுத்து
தெருப்பிள்ளையாருக்கு உடைப்பவனல்ல நீ
சொந்த செலவில் சூடம் ஏற்றும்
சுயமரியாதைக்காரன்.
தேசிய விருது உனக்கு
தேநீர் அருந்துவதுபோல
மாநில விருதுகள் பல
மறந்தே போயிருப்பாய்.
கலாநிதி பட்டங்கள்
காலடியிலே கிடக்கின்றன
ஆஷ்கார் விருது உன்
அருகில்தான் இருக்கின்றது
எப்பொழுது வேண்டுமானாலும் எடுக்கலாம்.
எம் மொழிக்காக இனத்திற்காக
இலக்கியத்திற்ககான நோபல் பரிசு
பெறும்நாள் எப்போது
அப்போது
தரணியிலே தமிழுக்கு மகுடம் சூட்டிய
தலைமகன் நீயென
உலகமே உன்னைப் போற்றும்.
வாழ்க .
தமிழ் வளர்க நின் தமிழ்த்தொண்டு

கந்தசாமி குமார்
சுவிஸ்