(வாஸ் கூஞ்ஞ)
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15வது நினைவேந்தல் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கஞ்சி வழங்கி நினைவு கூறப்பட்டு வந்த நிலையில் மன்னாரிலும் பல இடங்களில் இந்நினைவேந்தல் இடம்பெற்றது.
இந்த நிலையில் நினைவுகூறப்படும் இறுதி நாளாகிய மே 18ந் திகதி சனிக்கிழமை மன்னாரில் காலை 8.30 மணியளவில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு அருகாமையில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத் தலைவர் அருட்பணி நவரட்ணம் அடிகளார் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து அமைக்கப்பட்டிருந்த சின்னத்துக்கு முன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் , மதத்தலைவர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15வது நினைவேந்தலையொட்டி தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தது.