( வாஸ் கூஞ்ஞ) மன்னார் தீவிலே சுற்றுச் சூழல் காரணமாக கனியவள மணல் அகழ்வுக்கு மக்கள் விரும்பாமையால் சுற்றுச் சூழல் தாக்கம் அறிக்கையை பெற அனுமதிக்க முடியாது என மக்கள் உறுதியாக நின்ற காரணத்தினால் இது தொடர்பாக நடைபெற்றக் கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற வேண்டுகோளுக்கு அமைய மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும்படி மன்னார் அரசாங்க அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற்று இருந்தது.
இதற்கமைய அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் திங்கள் கிழமை (13) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இதற்கான கூட்டம் இடம்பெற்றது.
இதில் கனியவள மணல் அகழ்வு நிறுவன அதிகாரிகள் உட்பட மன்னார் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரச திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இக்கூட்ட முடிவில் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தில் அவுஸ்ரேலியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற கனியவள மணல் அகழ்வு நிறுவனத்தினால் மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வை மேற்கொள்வதற்காக 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது இன்று வரை இது தொடர்பான அய்வுகளை மன்னார் தீவில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதை அடிப்படையாக வைத்து இங்கு தொடர்ந்து கனியவள மணல் அகழ்வை மேற்கொள்ளும் முகமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதற்கு முயன்று வருகின்ற நிலையில் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக பொது மக்களின் எதிர்ப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற வேண்டுகோளுக்கு அமைய இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் இன்று (13) இந்தக் கூட்டம் இங்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , திணைக்களங்களின் தலைவர்கள் , குறிப்பாக மன்னார் தீவில் கனியவள அகழ்வுக்கு கடும் எதிர்ப்பை காட்டி வருகின்ற மன்னார் பிரஜைகள் குழுவினர் மற்றும் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பிட்ட பொது அமைப்பினர் மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் கனியவள மணல் அகழ்வு தொடர்பான விளக்கங்கள் பெற்றுள்ளதுடன் பொது மக்களுக்கும் அளிக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த திட்டத்தினால் மன்னார் தீவுக்கு பெரும்பாலான பாதிப்புக்களும் ஏற்படும் என்ற விடயமும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்துக்கு விஷேடமாக அழைக்கப்பட்ட புவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபுராஜா அவர்கள் தெரிவிக்கையில்
இத்திட்டம் மன்னார் தீவில் அமுல்படுத்தும் பட்சத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற விடயத்தை தெளிவாக சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த திட்டத்தை மன்னார் தீவு மக்கள் விரும்பாத காரணத்தினால் மன்னார் தீவை தவிர்த்து வேறு நிலப்பரப்பில் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படலாம் எனவும்
மன்னார் தீவிலே சுற்றுச் சூழல் காரணமாக மணல் அகழ்வுக்கு மக்கள் விரும்பாமையால் சுற்றுச் சூழல் தாக்கம் அறிக்கையை பெற அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் உறுதியாக நின்ற காரணத்தினாலேயே இக்கூட்டம் நிறைவு பெற்றது.
மன்னார் தீவு மக்கள் மன்னார் தீவில் களயவள மணல் அகழ்வு செய்ய விரும்பாத காரணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நாங்கள் அறிக்கை மூலம் சமர்பிக்க இருக்கின்றோம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இக்கூட்ட முடிவில் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)