முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் செயற்பாட்டிற்கு பொலிசார் முட்டுக்கட்டை

(சுமன்) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் செயற்பாட்டினைத் தடுக்கும் வகையில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இன்றைய தினம் மட்டக்களப்பு சுமைதாங்கிப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினைத் தடுக்கும் வகையில் ம்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து நிகழ்வினை இடைநிறுத்துமாறு வற்புறுத்தினர்.

அங்கு கூடியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அருட்தந்தை யோசப் மேரி அடிகளார் மற்றும் சிவில் செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் ஆகியோர் பொலிசாருடன் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு இறுதியில் பொலிசாரின் கெடுபிடிக்கும் மத்தியில் குறித்த நினைவேந்தல் கஞ்சி பரிமாறப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது.

இதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் பாண்டிருப்பு ஸ்ரீ அரசடியம்மன் ஆலய முன்றலில் இடம்பெறவிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் செயற்பாட்டினை அங்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலீசார் தடுத்து நிறுத்தியதோடு அவர்களை கைது செய்ய முற்பட்டனர்.

இதேவேளை அவ்விடம் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து விஷேட அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டதோடு, சமூக செயற்பாட்டாளரான துஷாநந்தனுக்கு வழக்கு இலக்கம் குறிப்பிடப்படாத நீதிமன்ற தடையுத்தரவு ஒன்றினை வழங்கி அனைவரையும் கலைந்து செல்ல வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட குழுவினரும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி மற்றும் சங்கத்தின் உபதலைவி செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவிற்குச் சென்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முறைப்படுகளைப் பதிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.