மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் சுமூகத் தீர்வு எட்டியது.

( வாஸ் கூஞ்ஞ)   மன்னார் பிரதான கட்டுக்கரைக் குளத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவு செய்ததில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கல்களால் நெடுங்கண்டல் மற்றும் அயல் கிராம விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து  திங்கள்கிழமை (13) காலை மாந்தை மேற்கு பிரதேச பகுதி விவசாயிகள் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

இதில் அதிகமான ஆண் பெண் விவசாயிகள் கலந்து கொண்டதுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் முஜாகீர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

அத்துடன் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளைக் கொண்ட மகஜர் ஒன்றும் அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்பட்டது

இதைத் தொடர்ந்து பிற்பகல் ஒரு மணியளவில் மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் நெடுங்கண்டல் விவசாய பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெற்றது

இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் அவர்களும் மற்றும் கமநல சேவை உதவி ஆணையாளர் , நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர் மற்றும்  கட்டுக்கரைக்குள வதிவிட திட்ட முகாமையாளர் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இங்கு நடைபெற்ற அரச அதிகாரிகளுக்கும் விவசாயிகளின் பிரதிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டது.  நெடுங்கண்டல் வாய்க்கால் திறக்கப்படுவதாகவும் புலவுக் காணிகள் அளக்கப்பட்டு குறிப்பிட்டவர்களுக்கு ஈவு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

(வாஸ் கூஞ்ஞ)