(சுமன்) மட்டக்களப்பு கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினர் இன்றைய தினம் (13) விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களை கொழும்பு விவசாய அமைச்சில் சந்தித்து மாவட்டத்தின் விவாசய நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடினர்.
கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையின் தலைவர் ச.சந்திரமோகன் தலைமையிலான குழுவினர் இச்சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது மாவட்டத்தில் நிலவும் விவசாய பிரச்சனைகளான 2023ஃ2024 பெரும்போக. காப்புறுதி நஸ்ட ஈடு சரியான முறையில் வழங்க ஏற்பாடு, உரத்துக்கான மானிய பணவைப்பினை விரைவு படுத்தல், மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் அணைக்கட்டுகள் விவசாய வீதிகள் என்பவற்றினைப் பூர்த்தி செய்தல், நெல்லுக்கான நிர்ணயவிலை மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைமூலம் நெல் கொள்வனவு, நவீன முறை விவசாயம், மாவட்டத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பற்றாக்குறை, கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
சந்திப்பின் பின்னர் குறித்த சந்திப்பினை ஏற்பாடு செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களுக்கு கமக்கார அமைப்பினர் தமது நன்றியினைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.