மன்னார் தீவில் 52 காற்றாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்.

( வாஸ் கூஞ்ஞ) பல எதிர்ப்புக்கள் மத்தியிலும் தொடர்ந்து மன்னார் தீவில் காற்றாலை உயர் மின் திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இவ்வாறு ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.

மன்னார் தீவில் ஏற்கனவே காற்றாலை மின் உற்பத்திக்கான நடவடிக்கையால் மன்னார் தீவு மக்கள் சொல்லொண்ணா துன்பத்தில் உள்ளாகிய நிலையில் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இருக்க தொடர்ந்து மன்னார் தீவில் 52 காற்றாலை உயர் மின் திட்டத்துக்காக அதானி நிறுவனத்துக்கு அங்கீகாரம் இலங்கை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளமையை மன்னார் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராட்டம் இடம்பெறும் என புதன்கிழமை (08) மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தொடர்ந்து தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
மன்னார் தீவில் காற்றாலையால் எமக்கு எற்பட்டுள்ள அழிவுகளை பல முறை தெளிவுப்படுத்தியுள்ளோம். அப்படியிருந்தும் தற்பொழுது அதானி நிறுவனத்துக்கு 52 காற்றாலைகள் நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல தடவை நாங்கள் இம்மக்களின் அழிவு தொடர்பாக சுட்டிக்காட்டியும் அமைச்சரவை இந்த முடிவை எடுத்திருப்பது வேதனைகளை உண்டுபண்ணியுள்ளது. எமது வாழ்விடம் திட்டமிட்டு பறிக்கப்படுகிறது.

எமது பண்பாடு மற்றும் வரலாற்றுச் சுவடுகள் யாவும் அழிக்கப்பட போகின்றது. மக்களின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மக்கள் வாழ  முடியாத நிலைக்கு தொடர்ந்து தள்ளப்படப் போகின்றனர்.

எமது எதிர்கால சந்ததினரான மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்கால நல வாழ்வும் பாதிக்கப்படும் அபாய நிலை தோன்ற போகின்றது.

மன்னார் தீவின் மக்களின் வாழ்வாதாரம் , வளமான மண் போன்றவைகள் தொடர்ந்து அழிவு நிலைக்கு தள்ளப்படாதிருக்க எமது மக்களை ஒன்றுத் திரட்டி பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

அத்துடன் இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது முடிவை நாங்கள் எதிர் பார்க்க உள்ளோம்.

மன்னார் தீவில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தகுந்த தீர்வை வழங்குவாராக இருந்தால் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்படும்.

மன்னார் தீவில் இருந்து ஒரு துண்டு நிலத்தை கூட நாங்கள் இத் திட்டங்களுக்கு  வழங்க மாட்டோம் . எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விட்டால் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்..

மேலும்  கனியவள மணல் அகழ்வினால் எமது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு போதிய விளக்கம் இன்மையினால் மக்களிடம் இருந்து திட்டமிட்ட வகையில் காணிகள் அபகரிக்கப் படுகிறது.

மேலும் சுமார் 500 ஏக்கர் வரையிலான காணிகளpல் கனியவள மணல் அகழ்வுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இது குறித்த திட்டங்களையும் நாங்கள் முற்று முழுதாக எதிர்க்கின்றோம் .என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.