பிரதான தேர்தலை இலக்கு வைத்து பிரஜா ஆலோசனைக் குழு.சஜித் பிரேமதாச.

தேர்தலை இலக்கு வைத்து, தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, ஒரு உள்ளூராட்சி மன்றத்துக்கு 10 மில்லியன் ரூபா வீதம், 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 3410 மில்லியனை ஒதுக்கீடு செய்து, அரசாங்கம் செய்யப்போகும் பாரிய பண விரயத்தை நிறுத்தி, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி இலங்கையில் உள்ள 10126 அரச பாடசாலைகளில் 3400 பாடசாலைகளுக்கு தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான திறன் வகுப்பறைகளை வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற, பிரஜா ஆலோசனைக் குழுக்களை அமைத்து, ஒவ்வொரு குழுவிற்கும் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதன் மூலம் பாரியளவில் பணம் விரயம் செய்யப்படவுள்ளமை குறித்து நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் கேள்வி எழுப்பியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட மட்டத்தில் பிரதேச அபிவிருத்தி, மாவட்ட அபிவிருத்தி மற்றும் விவசாய குழுக்கள் என பல குழுக்கள் இருக்கும் போது, புதிய குழு ஏன் தாபிக்கப்படுகிறது என்பதில் பிரச்சினை எழுகிறது. வங்குரோத்தான நாட்டில், முறைசாரா முறையில் செயல்பட முடியாது. இந்தப் பணம் சரியாக நிர்வகிக்கப்பட்டால், இந்நாட்டில் உள்ள 10126 பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான திறன் வகுப்பறைகளை நிறுவலாம்.

14022 கிராமங்களிலும் குழுக்கள் இருப்பதாகவும், இத்தகைய குழுக்கள் இருக்கையில் ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் நெருங்கி வரும் நிலையில் இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கென ஒதுக்கப்படும் பணத்தை கல்வி அமைச்சுக்கு வழங்கி திறன் வகுப்பறைகளை நிறுவ முடியும். இவ்வாறான பயனளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளாவிடின் இதனை சவாலுக்குட்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நிதியில்லை எனக் கூறிக்கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து நடத்தாதிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பிரஜா ஆலோசனைக் குழுக்களை நிறுவி, அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் போர்வையில், அரசாங்கத்தின் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

இந்தக் குழுக்களை அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியதன் மூலம் அரசாங்கம் தன்னிச்சையாகச் செயற்பட்டு பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தவிசாளர்களுக்கு இவ்வாறான அதிகாரங்கள் வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தை நாடியதன் மூலம் இந்த முயற்சி முன்னதாக வாபஸ் பெறப்பட்டது. PAFRAL அமைப்பு கூட இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்ட அரசியல் நடவடிக்கை என்று கூறியுள்ளது. இது பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் செயல் என்றும், தன்னிச்சையான செயல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமரின் கையொப்பத்துடன் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டத்தின் பிரகாரம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை அரசாங்கத்தால் நடத்த முடியும். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் தமது நண்பர்களை நியமிக்கவே குழுக்களை அமைக்கவுள்ளனர் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.