3 இலட்சம் கப்பம் கேட்ட இராணுவ மேஜர். மட்டக்களப்பில் சம்பவம்

கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் நபர் ஒருவரிடம் கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர்  3 இலச்சம் ரூபா கப்பமாக தருமாறும் இல்லாவிடில் போதை பொருள் வைத்து தன்னையும் மனைவியையும் தூக்கி சென்று இல்லாமல் செய்ய போவதாக  அச்சுறுத்தி மிரட்டிவருவதாக பாதிக்கப்பட்டவர் நேற்று திங்கட்கிழமை (6) முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

மட்டக்களப்பைச் சேர்ந்த ரங்கன் என் அழைக்கப்படும் சாமித்தம்பி வேலாயுதம் என்பவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் இடை தரகராக  கல்முனையைச் சோந்த ஒருவரிடம் 5 இலச்சத்து 70 ஆயிரம் ரூபாவையும் அதனுடன் 5 பேரிடம் பணத்தை வாங்கி  அதனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு எதிராக  இடைதரகர் கல்முனையைச் சேர்ந்த நபரின் சாட்சியுடன் மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து  அந்த  வேலைவாய்ப்பு முகவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த பின்னணியில் கல்முனை இராணுவ முகாம் மேஜர் இடைத்தரகரான ரங்கனிடம்  கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கல்முனையில் உள்ள நபரிடம் வாங்கிய பணத்தை தன்னிடம் தருமாறும் உடன் 3 இலச்சம் ரூபாவை தனது வங்கி கணக்கிற்கு போடுமாறு கப்பம் கோரியதுடன் பணம் தர மறுத்தால் போதை பொருள் வீட்டில் வைத்து மனைவியையும் உன்னையும் தூக்கி கொண்டு சென்று இல்லாமல் செய்வேன், 4ம் மாடிக்கு அனுப்புவேன் நான்  கொழும்பில் பெரிய பின்னணியைச் சேர்ந்தவன் விளையாடக் கூடாது என அச்சுறுத்தல் விடுத்துள்ளர்,

இதனையடுத்து குறித்த இராணுவ மேஜர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு இடை தரகரான ரங்கன் 30 ஆயிரம் ரூபாவை கப்பமாக அனுப்பியுள்ளதாகவும் தொடர்ந்து இராணுவ மேஜர் கையடக்க தொலை பேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரி வருவதாகவும் எனக்கும் எனது மனைவிற்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் குறித்த இராணுவ அதிகாரியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் இராணுவ மேஜருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (7) செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.