( வாஸ் கூஞ்ஞ) ஆறு பேர் கொண்ட மீனவர்கள் ஒரு படகில் சுழியோடி சங்கு பிடிக்கச் சென்றதில் ஒரு மீனவ குடும்பஸ்தர் வெளிக்கள இயந்திர காற்றாடியின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணத்தை தழுவிக் கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் புதன்கிழமை (24) காலை மன்னார் தென் கடல் பிராந்தியமான முத்தரிப்புத்துறை கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவரின் மரணம் தொடர்பாக மரண விசாரணை அதிகாரி ஏ.ஆ.நஸீர் விசாரணையை மேற்கொண்டார்.
மரண விசாரனை மூலம் தெரியவருவதாவது
மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பொனிப்பாஸ் தேவராஜன் பீரீஸ் (வயது 40) என்பவர் உட்பட ஆறு மீனவர்கள் சம்பவம் அன்று (24) காலை ஆறு மணியளவில் முதத்தரிப்புத்துறை கடற்கரையிலிருந்து வெளிக்கள இயந்திரப் படகு ஒன்றில் சங்கு குழிப்பதற்காகச் புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்று சற்று நேரத்தில் கடலில் சங்கு குழித்துக் கொண்டு இருந்தபொழுது இறந்தவர் ஓடிக் கொண்டு இருந்த படகுக்கு அருகாமையில் வந்த பொழுது வெளிக்கள இயந்திரத்தின் காற்றாலை இவரின் தலையில் தாக்கியமையால் இவர் ஸ்தலத்திலேயே மரணத்தை தழுவிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தலையில் ஏற்பட்ட காயத்தாலேயே மரணம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (25) மரண விசாரனையைத் தொடர்ந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி மரண விசாரணை அதிகாரி பொலிசாருக்கு உத்தரவுப் பிறப்பித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)