( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம முன்னிலையில் சுவாமி விபுலானந்தர் ஆண்டு நேற்று(23) செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமியில் பிரகடனம் செய்யப்பட்டது.
விபுலானந்த அடிகளார் துறவறம் பூண்டு நேற்று (23.04.2024) 100 ஆண்டுகள் ஆகின்றன.
1924 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியில் இகிமி.சுவாமி சிவானந்தரிடம் ஞான உபதேசம் பெற்று பண்டிதர் மயில்வாகனன் சுவாமி விபுலானந்தர் ஆனார்.
நேற்றுமுன்தினம் சிறப்பாக இடம்பெற்ற நூற்றாண்டு விழா அங்குரார்ப்பண வைபவம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக நந்திக் கொடி ஏற்றி சுவாமிகளின் இல்லத்தில் விசேட பூஜை இடம் பெற்று நூற்றாண்டுவிழா பதாதை அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.
திருமுன்னிலை அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் கலந்து ஆசியுரை வழங்கி சிறப்பித்தார்.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் வரவேற்புரையாற்றினார்.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு இடம்பெற்றது.
மேலும், சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனப்பணிப்பாளர் கலாநிதி திருமதி ப்ளோரன்ஸ் பாரதி கென்னடி ஆகியோர்
கலந்து சிறப்பித்தா ர்கள். மேலும் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.நிருபா, பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் எம்.இராமக்குட்டி, விபுலானந்தா பணி மன்ற ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, ஆலையடிவேம்பு த.கயிலாயபிள்ளை, தம்பிலுவில் கண.இராஜரெத்தினம் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நூற்றாண்டுவிழா பிரகடனத்தை வாசித்தளித்தார்.
அப்போது அதிதிகளுக்கு விபுலானந்தரின் வரலாற்று படங்கள் வழங்கப்பட்டன. பிரகடன பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
சுவாமி விபுலானந்த நிருத்தியாலய மாணவிகளின் கண்கவர் நடனங்கள் இடம்பெற்றன. யாழ்.பல்கலைக்கழக நடனபீடமாணவி செல்வி ஜெயகோபன் தக்சாளினியின் தனி நடனம் பலரையும் கவர்ந்தது.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து சுவாமி விபுலானந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.