எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
புதிய பயணத்தை மேற்கொள்ள முயலும் போது, வீதிகளுக்கு இறங்கி, வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர் போன்ற வேடிக்கையான கதைகளைச் சொல்கின்றனர். ஒன்றன் பின் ஒன்றாக தேசபற்று குறித்த கதைகளை பேசும் தீவிர சோசலிச கம்யூனிஸ தலைவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். அவர்களின் பிள்ளைகள் தனியார் பாடசாலை மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிக்கும்போது, நாட்டின் ஏனைய பிள்ளைகள் சர்வதேச கல்விக்கான ஆணையை இழக்கின்றனர். எனவே இந்த போலி சோசலிசவாதிகளின் பொய்க் கதைகளுக்கு ஏமாந்து விடாதீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 150 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், புத்தளம், ஆனமடுவ, கருவலகஸ்வெவ, சாலியவெவ மாதிரி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 09 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
2024 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஒரு திருப்புமுனையான வருடமாகும். வங்குரோத்தான நாட்டில் 220 இலட்சம் பேர் நிர்க்கதியாகி கிடக்கும் இவ்வேளையில் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். எமக்கு ஆட்சிக்கான சந்தர்ப்பம் கிட்டும் போது நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நிதியை எமது நாட்டிற்கு மீள பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
காலாவதியான கல்வி முறைக்கு பதிலாக நவீன கல்வி முறை நாட்டுக்கு தேவை. ஒரு நாடு என்ற ரீதியில் சர்வதேச ரீதியில் போட்டியிடக்கூடிய கல்விமுறையை உருவாக்கி, நமது நாட்டிற்கு மதிப்பு சேர்ப்பதுடன், மதிப்பு அதிகரிக்கும் வகையிலும் உலகை கையாள்வது அவசியம். இதற்கு, படித்த, புத்திசாலித்தனமான, அறிவார்ந்த தலைமுறையை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.