கல்வியில் புதியன புகாமல் புத்தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

நாட்டில் ரூபா மற்றும் டொலர் தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், இந்தப் பற்றாக்குறைக்கு யார் தீர்வை வழங்க முடியும் என்பதை நிரூபிக்க இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும். அதிகாரம் இல்லாமலும் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் சேவையாற்றி திறமையை வெளிக்காட்டியுள்ளோம்.எனவே மக்கள் இது குறித்து நோக்கி வாக்கை சரியாக பயன்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முறைமை மாற்றத்தை நோக்கிய பயணத்தில் தேய்ந்து போன சம்பிரதாய அரசியல் கலாசாரத்தில் அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்குவோம்.  சேறுபூசல்,வன்முறை மூலம் அதிகாரத்தைக் காட்டுவதை விட, அபிவிருத்திக்கான போட்டியாக பங்கேற்று சிறந்த அரசியல் நடவடிக்கையை மக்களுக்காக முன்னெடுக்கும் போக்கு குறித்து நோக்க வேண்டும். இதன் மூலம் சரியான அபிவிருத்தி பார்வை கொண்டவர் யார், சொல்வதைச் செய்யும் தலைவர் யார் என்பதை மக்களால் தெளிவாக கண்டறிய முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள கல்வி முறையை மாற்ற வேண்டும். யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களம் மட்டும் தமிழ் மட்டும் என போலியான தேசபற்றை முன்னிலைப்படுத்தி உணர்வுவயமாக செயற்படுவதால் 41 இலட்சம் பிள்ளைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். ஆங்கில மொழி கல்வியறிவை உயர் மட்டத்தில் பேணுவதே உலகளாவிய உண்மையாகும். இது குறித்து கூறும் போது சேறுபூசுகின்றனர். கேலி செய்கின்றனர்.நான் யதார்த்தையே பேசுகிறேன். உலக போக்குக்கு ஏற்ற விதமாக எமது நாட்டில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆங்கிலமும் தகவல் தொழிநுட்ப துறைகள் முக்கிய பரப்பாகும். புதியன புகாமல் புத்தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. முற்போக்கு ரீதியாக கல்விக்கட்டமைப்பில் மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டும். இன்று தனியார் பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கற்றல் வசதிகள் அரச பாடசாலைகளில் இல்லை. கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் கழையப் பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 146 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், புத்தளம், வென்னப்புவ, தங்கொடுவ, பொதுவடவன ஸ்ரீ ஜினரதன மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 08 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.