விவசாயிகள் வாங்குபவர்களாக இருக்காது கொடுப்பவர்களாக மாற வேண்டும். விவசாய பணிப்பாளர் சகிலா பானு.

(வாஸ் கூஞ்ஞ) சிறந்த விவசாயிகளாக திகழும் நீங்கள் வாங்குபவர்களாக இருக்காது கொடுப்பவர்களாக மாற வேண்டும். மிளகாய செய்கையில் எவ்வாறு முன்னேற்றம் அடையலாம் என்பதை உங்களுக்கு சிறந்த வழிகாட்டல் தற்பொழுது தரப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மீள்குடியேறி வாழும் நான்கு கிராமங்களான பிச்சைவாணிப நெடுங்குளம் அலக்கட்டு . வேப்பங்குளம் அலக்கட்டு . அகத்தி முறிப்பு அலக்கட்டு  மற்றும் பொற்கேணி அலக்கட்டு ஆகிய நான்கு கிராமபுறங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 250 மிளகாய் செய்கை உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உயர்தர வர்க்கம் கொண்ட மிளகாய் விதைகள் வழங்கப்பட்ட நிகழ்வு கடந்த வாரம் இறுதியில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

மன்னார் மாவட்டத்தில் நான் நீண்டகாலமாக சேவையாற்றி வருவதால் குறிப்பிட்ட இந்த கிராம பகுதிகளில் பயிர் செய்கை தொடர்பாக எந்த திட்டங்கள் வந்தாலும் நான் முதலில் முன்மொழிவது மிளகாய் பயிர் செய்கையையே.

மிளகாய் ஒரு பழப்பயிர். இதை செய்யும்போது கூடிய வருமானத்தை பெறக்கூடிய வாயப்புக்கள் அதிகம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் முன்னைநாள் அமைச்சர் இந்த பகுதிகளில் மிளகாய் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க வேண்டும் என திட்டம் தீட்டியிருந்தார்.

இங்குள்ள நீங்கள் கல்பிட்டியில் இருந்தபொழுது மிளகாய் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தமை எனக்குத் தெரியும். இதனால் உங்களுக்கு நல்ல அனுபவமும் இருக்கும் என்பதும் வெளிச்சம்.

நாம் வாங்குபவர்களாக இருக்காது கொடுப்பவர்களாக மாற வேண்டும். நீங்கள் மிளகாய செய்கையில் எவ்வாறு முன்னேற்றம் அடையலாம் என்பதை உங்களுக்கு சிறந்த வழிகாட்டல் தற்பொழுது தரப்பட்டுள்ளது.

உங்களுக்கு இதற்கு மேலாகவும் உங்கள் பயிர் செய்கை தொடர்பாக எது தேவையானாலும் எம்மை நீங்கள் நாடலாம்.

இன்றைய இந்த பயனாளிகளின் நலன் நோக்கி விவசாய போதனாசிரியர்களை அடிக்கடி இங்கு அனுப்பி உங்களால் முன்னெடுக்கப்படும் இந்த செய்கையில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் வாரம் ஒருமுறையாவது உங்களுக்கு விவசாயம் தொடர்பாக பயிற்சி வகுப்புக்களும் நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் சகிலா பானு இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)