மறைந்தாலும் மறையாத இராயப்பு யோசப் ஆண்டகையின் மூன்றாம் ஆண்டு.

(வாஸ் கூஞ்ஞ) இரண்டு தசாப்தத்திற்கு மேலாக தமிழர்களிற்காக  ஓயாது உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அமரர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை மதம் கடந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனச்சாட்சியாக  நீதியின் குரலாக இடைவிடாது உண்மையை உரத்து பேசிய உத்தமர் தமிழ்த்தேசிய விடுதலை அரசியலில் ஆண்டகையின் வகிபாகம் இன்றியமையாதது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமரர் இராயப்புயோசப் ஆண்டகையின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் (02.04.2024) தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர் வி.எஸ்.சிவகரன் விடுத்திருக்கும் செய்தியில்

தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டு நாதியற்று தவித்த சந்தர்ப்பங்களில் எல்லாம்  நேரடியாக களத்திற்கே போனவர் அதுமட்டுமின்றி துணிந்து நிமிர்ந்து வீறுநடை போட்டவர்

தமிழ்த்தேசியத்தை ஏற்றுக் கொண்டு விடுதலையை வென்றாக வேண்டும் என்று பெரும்பங்காற்றியவர் அவருக்கு ஏற்பட்ட சவாலான காலகட்டங்களில் கூட துணிந்து நின்று பல விசாரனைகளை கூட எதிர்கொண்டவர்.

சர்வதேச ரீதியாக இலங்கை அரசிற்கு பெரும் இராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்தியவர். சுயநிர்ணய உரிமையே தமிழர்களுக்கு தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்தியவர். தடம் மாறாத தமிழ்த்தேசிய தளத்தில் வீறுநடை போட்டவர்.

தமிழர்களுக்கு  இறுதி யுத்தத்தில்  நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட மனித இன அழிப்பு  என்று உறுதியுடன் பல்வேறு விதமான ஆதாரங்களை முன்வைத்து  இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் 2011.01.07 திகதி அன்று மன்னாரில் சாட்சியம் வழங்கும் போது உரத்த குரலில் அதட்டி கர்ஜித்தவர்.

ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்தால் வெளியிடப்பட்ட வன்னியின் மக்கள் தொகை புள்ளிவிவரத்தை ஆதாரமாகக் கொண்டு வன்னியில் 2009 ஆண்டு முற்பகுதியில் நான்கு இலட்சத்து  இருப்பத்தி ஒன்பதாயிரத்தி ஐம்பத்து  ஒன்பது நபர்கள் (429059). இவர்களில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்கள் காயமடைந்தவர்கள் இரண்டு இலட்சத்தி எண்பத்தி இரண்டாயிரத்தி முன்நூற்றி எண்பது(2இ82இ380) நபர்கள்

ஆகவே மீதி ஒரு இலட்சத்தி நாற்பத்தி ஆறாயிரத்தி அறுநூற்றி எழுபத்தி ஒன்பது (1இ46இ679) இவர்கள் எங்கே  இவர்களை இனப்படுகொலை செய்து விட்டிர்கள் எனும் கேள்வியை எழுப்பி சர்வதேச ரீதியாக பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தினார்

அதனால் இலங்கை அரசிற்கு சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் பெரும் நெருக்கடி கொடுத்தன அதன் விளைவாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணைக்கு உள்ளானார்.

அரசால் மேற் கொள்ளப்பட்ட சகல உரிமை மீறல்களுக்கும் எதிராக  நீதி கேட்டு பெரும் சனநாயக போர் தொடுத்தவர். பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் பாதுகாப்பு அரனாக துணைநிண்டவர் பல விதமான மனிதாபிமான பணிகளை  மேற்கொண்டவர் மடுப்பகுதியில் மிக நீண்ட காலம் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து உரிய ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர்

குறிப்பாக மன்னாரில் நடக்கும் சகல விடயங்களிலும் தனது அக்கறையை செலுத்தியவர்  ஒரு நிழல் நிர்வாகத்தையே நடத்தியவர்  பாதிக்கப்பட்ட  பொதுமக்கள் பலர் மதம் கடந்து நீதி கேட்டு படையெடுத்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவமே தமிழர் நிலத்தில் இருந்து வெளியேறு எனும் முதலாவது  போராட்டம் மன்னாரில் 07.07.2012 நடைபெற்றது இதில் கலந்து கொண்டு இராணுவத்திற்கு  வடகிழக்கில்  இனி என்ன வேலை என அரசியல் வாதிகளை விட உரத்து பேசியவர்

2007.01.02 திகதி இலுப்பைக்கடவை படகுதுறையில் வசித்த மீனவ குடும்பங்கள் மீது விமான குண்டு தாக்குதல் நடாத்தியதில் பெண்கள்  சிறுவர்கள் உட்பட பதினாறு பேர் கொல்லப்பட்டு 34பேர் படுகாயமடைந்தனர்

இந்த சம்பவம் நடந்து சில மணி நேரத்தில் உரிய இடத்திற்கு சென்று நிலமையை அறிந்து உடனடியாக கொழும்பு சென்று அன்றைய சனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பெரும் வார்த்தைப் போர் நடத்தியவர் இவரின் அடுக்கடுக்கான கேள்வியால் சனாதிபதி ராஜபக்ச சந்திப்பை இடைநடுவில் முறித்துக் கொண்டவர்.உண்மைக்காக நீண்ட நெடிய வாதம் செய்பவர்

இலங்கை அரசு இவரை ஒரு கத்தோலிக்க தலைமை மதகுருவாக பார்க்காமல் புலிகளின் பேச்சாளர் என்றே கடும் விமர்சனம் செய்திருந்தது.

யுத்தத்திற்கு பின்னர் இராயப்பு யோசப் ஆண்டகை தமிழ்மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்  தமிழ்த்தேசிய அரசியல் வாதிகளை அழைத்து பலமுறை ஆலோசனையும் சில தடவைகள் மிகவும் காட்டமாக கடிந்து கொண்டதும் உண்டு.

சிவில் செயற்பாட்டாளர்களிற்கு பெரு நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார் என்ன நடந்தாலும் மன்னார் ஆயர் இருக்கிறார் என்பதே பலரின் எதிர்பார்ப்பு அதை  பல சந்தர்ப்பங்களில் நிறைவேற்றியவர்.

ஏதிலிகளாக வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்று உரிய உதவிகளை செய்தவர்  இலகுவாக கடந்து செல்ல முடியாத காலத்தின் பதிவுகள் அவை மடுவை இரானுவம் கைப்பெற்றப் போகிறது என்றதும் மதாவின் திருச் சொரூபத்தை அங்கிருந்து  இடம்பெயர்த்தி மக்களோடு மாதாவையும்   துணிந்து அனுப்பியவர்

அதனால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார்  இப்படி சாமி சிலையை கொண்டு சென்ற வரலாறு வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. அதையும் முற்போக்காக செயல்படுத்திக் காட்டியவர்

‘அஞ்சாமை ஈகை  அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கியல்பு’ எனும் வள்ளுவ வாக்கை  போல் உறுதியான திடமான தலைமைத்துவம் வழங்கியவர்.

அவரது நாளாந்த பணியில் சமய விடயங்களுக்கு செலவிட்ட நேரத்தை விட தமிழின  இனவிடுதலைக்காகவே அதிக நேரத்தை செலவிட்டார். ஓய்வுக்கு பின்னர் முழுமையாக தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக பணி செய்யப்போவதாகவே எண்ணியிருந்தார்.

ஆகவே பலர் இறந்து விடுகிறார்கள் சிலர் மட்டும் மரணித்துப் போகிறார்கள் இறப்பவர் மறக்கப்படுகிறார் மரணிப்பவர் மக்கள் மனதில் நிலைவாழ்வு பெறுகிறார்கள்  தமிழ்தேசிய வரலாற்றில் ஆயர் எப்போதும் முதன்மையிடம் பெறுவார். ஏன இவ்வாறு தெரிவித்துள்ளார்

(வாஸ் கூஞ்ஞ)