நீங்கள் வாக்களித்த கருணா எங்கே?   கல்முனையில் அரியநேந்திரன் கேள்வி.

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட தவறுக்காக கடந்த தேர்தலில் தண்டனை தந்தீர்கள் . அதற்காக கருணாவுக்கு  வாக்களித்தீர்கள். இன்று ஜனாதிபதியின் ஆலோசகர் என்றும் படையணி திரட்டுவதாகவும் கூறுகிறார். இப்பொழுது நீங்கள் போராடுகிறீர்கள். எங்கே அந்த கருணா?
 இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கல்முனை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் கருத்துரைக்கையில் தெரிவித்தார்.
கல்முனையில்  (2) செவ்வாய்க்கிழமை 9 வது நாளாக தமிழ் மக்களது போராட்டம் தொடர்கிறது.
 மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா. ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன் ஆகிய ஆகியோர் சமூகமளித்திருந்தார்கள் .
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் அரியம் மேலும் பேசுகையில்..
 கடந்த முறை இங்கு நீங்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்ட பொழுது ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்தார். அவர் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் ஒப்பத்தோடு இங்கு கணக்காளரை நியமிப்பதற்காக ஹெலிகாப்டரில் இங்கே அதனை அனுப்பி வைத்திருந்தார் . அது ஒரு திட்டமிட்ட நாடகம்.
அது அடுத்த நிமிஷம் காற்றோடு கலந்தது. ஏமாறினோம். அதே ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கின்றார் .
அன்று இப்படியான கணக்காளர் நியமன போலி கடிதத்தை சமர்ப்பித்த ரணில் விக்கிரமசிங்க அன்று ஏமாற்றியவாறு இம்முறை ஜனாதிபதியாக இருக்கின்ற பொழுதும் ஏமாற்றுவாரா என்பது தமிழ் மக்களுக்கு சந்தேகமாய் இருக்கின்றது.
 நல்லாட்சியில் பிரதமராக இருந்த ரணில்  விக்கிரமசிங்க கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நிரந்தரமாக்குவதற்கான வாக்குறுதியை அளித்திருந்தும் இன்னும் அது நிறைவேறவில்லை.
மாறாக இங்கு அதிகாரம் பிடுங்கப்படுகிறது. இதற்கு அடிப்படை பின்னணியிலே சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் அதற்கு உயர் அதிகாரிகள் சிலரும் துணை போகிறார்கள்.
 இன ரீதியாக தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் .
நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்து இருக்கிறோம் .அந்த வழக்கு தாக்கல் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே இந்த அதிகாரங்களை பிடுங்குவதற்கு இந்த அரசாங்க அதிபர் அல்லது ஏனையோர் யார் என்பதை கேட்க விரும்புகின்றோம் .
இந்த நீதிமன்றத்தை அவர்கள் தான் அவமதிக்கிறார்கள்.
நாம் இந்த கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தொடர்ச்சியாக பூரணமாக நாங்கள் பயணிப்போம்.
 பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் உறுப்பினர்கள் அனைவரையும் நாங்கள் நம்புவதில்லை. தமிழ் தேசியத்துடன் சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் எமக்காக என்றும் குரல் கொடுப்பார்கள். அண்மையில் இந்தியாவிலே  சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் கையெழுத்திட்டு கையளித்து இருந்தார்கள். அதே தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்பது நம்பிக்கையாக இருக்கின்றது.
 ஆனால் டக்ளஸ் பிள்ளையான் வியாழேந்திரன் போன்றவர்கள் தமிழர்கள் இல்லை. அவர்கள் பெயருக்குத் தான் தமிழர்களாய் இருக்கிறார்கள் .
24 மணி நேரத்தில் இதனை தரமுயர்த்திஏன தருவோம் என்று அன்று இங்கு வந்த பிள்ளையான் கூறினார் முழு கிழக்கையும் முடக்குவோம் என்று வியாழேந்திரன் கூறினார் .மூன்று நாளிலே இதனை ஏற்படுத்தி தருவோம் என்று கருணா கூறினார் .
இவர்கள் எல்லாம் இன்று எங்கே? என்று நான் கேட்கின்றேன் .
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நீங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் நாங்கள் தொடர்ந்து இதற்காக குரல் கொடுப்போம்  .
எமது கட்சிக்குள் இருந்து  அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனை தடுத்திருந்தார்கள். யார் என்பதனை அறிவீர்கள்.
 இல்லாவிட்டால் அந்த நேரத்திலே  அந்த அந்தஸ்து கிடைத்திருக்கும். இனி தேர்தல் வரும் .எனவே காப்பு கடை போடுவது போன்று அரசியல்வாதிகளும் இங்கு வர தொடங்குவார்கள். அப்பொழுது பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று. வணக்கம்  என்றார்.