தொண்டர் ஆசிரியர்கள்  திருகோணமலையில் போராட்டம்.

 (ஹஸ்பர் ஏ.எச்) தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்கக்கோரி திருகோணமலையில் நேற்று 01) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தனர். அபயபுர சந்தியில் இருந்து நடை பவணியாக பதாகைகளை ஏந்தியவாறு கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் வரை தொண்டர் ஆசிரியர்கள் சென்றனர். கடல் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவாநந்தாவின் படங்களை பதாகைகளாக ஏந்தியும் மூத்த அமைச்சர் கௌரவ டக்லஸ் ஐயா நிரந்தர நியமனத்தை பெற்றுத் தாருங்கள் போன்ற வாசகங்களையும் ஏந்தியிருந்தனர்.
இதன் போது கருத்துரைத்த கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கு.சிவங்கர் தற்போது 250 தொண்டர் ஆசிரியர்கள் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் வடகிழக்கு உட்பட ஒட்டு மொத்தமாக தமிழ் பேசும் ஒரு சிரேஷ்ட கடல் தொழில் அமைச்சராக டக்லஸ் தேவானந்தா காணப்படுகிறார் இவர் எங்களுக்கான நியமனத்தை பெற்றுத் தர வேண்டும் .கடந்த யுத்த காலங்களில் பல இன்னல்களுக்கு மத்தியில் தொண்டராசிரியர்களாக கடமையாற்றியுள்ளோம் தற்போது உண்ணாவிரதம் போராட்டம் என பல விடயங்களை செய்து வருகிறோம் எனவே எங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.
இதன் போது குறித்த கவனயீர்ப்பில் கடல் தொழில் அமைச்சரின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட இணைப்பாளர் புஷ்பராசாவும் பிரசன்னமாகியிருந்ததுடன் மஹஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது அதனை ஏற்றுக் கொண்ட அவர் அமைச்சருக்கு அறிவித்து மஹஜரை அனுப்பி நியமனத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இக் கவனயீர்ப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொழுத்தும் வெயிலில் பங்கு கொண்டனர்.