( வி.ரி. சகாதேவராஜா) திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது ஆர்ப்பாட்டம் நடாத்தி தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்யாவிடின் குறித்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்பட நேரிடலாம்.
இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் டாக்டர் அன்பாஸ்பாறூக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இலங்கையில் வைத்தியர்களுக்கு போதுமான ஊதியம் பாதுகாப்பின்மை காரணமாக பலர் வெளிநாடு சென்று கொண்டிருக்கின்றார்கள் . இந்த சூழலில் திருக்கோவிலில் கடந்த 11ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் ஒன்றில் 17 வயது மரதனோட்ட மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார் .அதனையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீது சீருடை அணிந்த மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுவினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தினார்கள். பாடசாலை நேரத்தில் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? பொதுமக்கள் பின்னால் அரசியல்வாதிகள் இருந்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் எமது வைத்தியர்களை விலக்கி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தோம் . இதனால் கடந்த இரு வாரங்களாக வைத்திய சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஆனால் போலீசார் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதில் ஒருவித அசமந்த போக்கு இழுத்தடிப்பு செய்கிறது.இன்னமும் அங்கு பாதுகாப்பின்மை நிலவுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் இந்த வைத்தியசாலை நிரந்தரமாக மூடப்படக்கூடிய அபாயமும் இருக்கின்றது. இதனால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம் .
இருந்த பொழுதிலும் எமது பாதுகாப்பு கருதி இன்றாவது அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி கல்முனை பிராந்திய சுகாதார வைத்தியசாலை உட்பட்ட வைத்தியசாலைகளில் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கின்றோம். என்றார்.