எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
பாராளுமன்றத்தில் தான் அதிகம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்தாலும் தனது தனிப்பட்ட விடயங்களை பேசாமல் 220 இலட்சம் மக்களின் உரிமைகளை பற்றியே தான் பேசுவதாகவும் தற்போதைய அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான வர்த்தமானியை பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிட்டுள்ளதாகவும் , சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் போது குற்றத்தின் வயதெல்லையை 16 ல் இருந்து 14 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் பெண்னை துஷ்பிரயோகம் செய்த ஆணின் வயது 22 க்கு உட்பபட்டதாக இருப்பின் தண்டனையை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு வழக்குகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கென பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்ட சட்டத்துடன், ஆண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகுவது தொடர்பான சட்டத்தையும் இணைத்து, அரசாங்கம் இரண்டு சட்டங்களையும் ஒரே சட்டமாக அமுலாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தான் குரல் எழுப்பியதாகவும், அதற்கேற்ப பெண்களையும் சிறுமிகளையும் இழிவுபடுத்தும் இந்த தவறான சட்ட விதிகளை நீதியமைச்சர் மீளப்பெற்றுள்ளதாகவும் இது அனைத்து பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று (23) காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெண்களுக்காக கூடிய பலத்தையும் வலுவூட்டுதலையும் வழங்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வந்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை அடிப்படை உரிமைகளாக மாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து பிரதேச செயலக மற்றும் உப பிரதேச செயலக பிரிவுகளிலும் மகளிர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை ஸ்தாபித்து திறமைகளுடன் கூடிய ஸ்மார்ட் பெண்களை உருவாக்குவதாகவும்,
17,910 முன்பள்ளிகளில் கல்வி கற்கும் 279,000 பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
வீட்டிலும், வீதிகளிலும், பணியிடங்களிலும் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களின் உரிமைகளை விசேட அரச கொள்கையின் ஊடாக பாதுகாப்பதாகவும் பெண்களின் சுகாதார மேம்பாட்டுக்கு பிரத்தியேக வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதாகவும் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணியையும் ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதாகவும் பெண்களுக்காக அதிக சேவையை முன்னெடுக்கும் ஆட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் சாதனை படைக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.