சிட்னியில் வெள்ளியன்று சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலை திறப்பு விழா

அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில் எதிர்வரும் 29 ஆம் தேதி வெள்ளியன்று உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவ ச்சிலை திறப்பு விழா இடம்பெறவுள்ளது.

“சிட்னியில் வாழும்   காரைதீவைச் சேர்ந்த “உதயசூரியன்” மாணவர் உதவி மையத்தின் தலைவரும்,  “உதயசூரியன்” பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான பிரபல பரோபகாரி நாகமணி குணரெத்தினம் “கிழக்கு உதயசூரியன்” முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு சிலை எடுக்கிறார்.
சுவாமிகள் பிறந்த இலங்கை திருநாட்டிற்கு  வெளியே முதல் தடவையாக கடல் கடந்த நாடுகளில் சுவாமிகளின் திருவுருவச் சிலை நிறுவும் முதல் வரலாற்று நிகழ்வு இதுவாகும்.
இச் சிலை சுவாமி விபுலானந்த அடிகளாரின் 132 ஆவது ஜனன  தினமான 27.03.2024 ஆம் திகதிக்கு பின்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிட்னி மாநகரில் துர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இச்சிலை திறப்புவிழாவிற்கு உலகநாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியா லண்டன் கனடா சிங்கப்பூர் மலேசியா பிரான்ஸ் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பல பேராளர்கள் சிட்னிக்கு வருகைதரவிருக்கின்றனர்.
வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளார் பிறந்த காரைதீவுமண்ணிலிருந்து சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த  பணிமன்ற முன்னாள் தலைவரும் ஆலோசகருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையிலும் ,மட்டக்களப்பு மண்ணிலிருந்து மட்டக்களப்பு தமிழ் சங்கத் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் குழுவினர்  இச்சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ளது.
.
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்தஅடிகளாருக்கு இலங்கைநாட்டிற்கு வெளியே முதன்முதல் அவுஸ்திரேலியமண்ணில் முதலாவது வெண்கலச்சிலை திறந்துவைக்கப்படவிருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  சந்தர்ப்பம் இது.
சுவாமியின் அபிமானியும்எழுத்தாளரும் சமுகசேவையாளருமான  அவுஸ்திரேலியாவின்தலைநகர் சிட்னியில் வாழும் காரைதீவைச்சேர்ந்த திரு.நா.குணரெத்தினம்  தன்னந்தனியனாக நின்று இவ்வெண்கலச்சிலையை நிறுவவுள்ளார்.
சிலைதிறப்புவிழாவின்போது  ” சிட்னியில் அடிகளார் படிவமலர் ” எனும் சிறப்பு மலரும் வெளியிடப்படவிருக்கிது.
இது இவ்வாறிருக்க
உலகநாடுகளை உலுக்கிய கொடிய  கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அவுஸ்திரேலியாவின் சிட்னிநகரில் கடந்த 2020.04.04 ஆம்திகதி நடைபெறவிருந்த முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளாரது திருவுருவச்சிலை திறப்புவிழா பிற்போடப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இதேவேளை  உதயசூரியன் குணரெத்தினம் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலையை நிறுவியுள்ளார்.
அதேபோல் காரைதீவு சுவாமி விபுலானந்த கலாசார மண்டபத்திலும் விபுலானந்த சிலை நிறுவவுள்ளார்.
 தனதுபெற்றோரான காரைதீவைச் சேர்ந்த பொன்னம்பலம் நாகமணி தம்பதிகள் நினைவாகவும், தனதுவளர்ப்பு தந்தை காத்தமுத்து வேல்நாயகம் (தலைமை ஆசிரியர்)தம்பதிகளின் நினைவாகவும் இச்சிலைகள் நிறுவப்படுகின்றன என்றும்அவர் தெரிவித்தார்.
சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்பாக நடைபெற இறைவனை பிரார்த்திப்போம்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா