பெண்ணினம் துணிந்து செயற்பட்டால் பலவற்றை சாதிக்க முடியும்

முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்

( வாஸ் கூஞ்ஞ)

ஒரு பெண்ணால் , தாயாயால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. ஆகவே பெண்கள் அச்சம் கொள்ளாது சமூகத்துக்கு தொண்டு ஆற்றும் வீர மங்கையாக செயலாற்ற வேண்டும் என முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை (19) சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு; மன்னார் பிரதேச சர்வ சமயக் குழு மற்றும் தொடர்பாடல் மையமும் இணைந்து மன்னார் ஆகாஷ் ஹொட்டலில் இத்தினம் நினைவு கூறப்பட்டபோது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்த கொண்ட முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தொடர்ந்து தெரிவிக்கையில்

மகளீர் தினத்தில் பெரும்பாலும் ஊதா நிறத்தையே பாவிப்பார்கள் இங்கும் அதையே பாவித்துள்ளீர்கள். இதற்க காரணம் இந்த ஊதா நிறம் என்பது கம்பீரம் . கண்ணியம் மற்றும் வீரம் இதையே எடுத்துக் காட்டுகின்றது.

இது பெண்களுக்குரிய ஒரு பண்பாக இருக்கின்றது. சர்வதேச மகளீர் தினம் ஒரு கொண்டாட்டமல்ல. மாறாக இது ஒரு தினைவுத் தினம்.

அன்று பெண்கள் ஆண்களுக்கு வழங்கும் சம்பளத்தைப் போல் தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பெண்கள் போராடினார்கள்.

அது அன்று மறுக்கப்பட்ட நிலையில் பல பெண்கள் ஒன்றுகூடி தங்களை தாங்களே தீ மூட்டி கருகி போனார்கள்.

காரணம் எதிர்காலத்தில் பெண்களுக்கு விடிவு பிறக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனையிலேயே இதை மேற்கொண்டனர்.

அந்த நபர்களை நினைவு கூறவே நீயோர்க் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டு ஐ.நா.வினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இதை ஒரு தியாகத்தின் நினைவு நாளாக அனுஷ்க்கப்பட்டு வருகின்றது.

ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் என்று சொல்லும்போது எல்லோருக்கும் ஒரு ஆணின் நினைவும் தாதி என்று கூறும்போது ஒரு பெண்ணின் நினைவே தோன்றும்.

இது எதை குறிக்கின்றது என்றால் அதிகார தன்மை உள்ளவர்கள் ஆண்கள் என்றும் இவர்களுக்கு பணி செய்கின்றவர்கள் இவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் என தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு எமது நாட்டின் மகளீர் தின விருது வாக்கு சமத்துவம் என்பதாகும். இந்த சமத்துவம் இன்னும் சரியான முறையில் வழங்கப்படாமையால்தான் மீண்டும் மீண்டும் இத்தினம் நினைவு கூறப்பட்டு வருகின்றது.

ஆகவே சமத்துவத்துக்காக போராடும் பெண்கள் தியாகத்தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும். இந்தியா கேரளாவில் 1988 இல் ஒரு பெண் ஒரு அமைப்பில் தாதியாக இணைந்து கொண்டிருந்தாள்.

அவள் தனது திருமணத்துக்காக விடுமுறை பெற்றுச் சென்றபோது திருமணம் செய்தவர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு இல்லையென வீட்டுக்கு அனுப்பப்படுகின்றாள்.

ஆனால் பெண்கள் உரிமைக்காக இந்த பாதிப்பு அடைந்த பெண் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தாள். 36 வருடங்களுக்குப் பிற்பாடே கடந்த மாதம் இதற்கான தீர்ப்பு கிடைக்கப்பெற்றது.

அதாவது பெண்கள் எந்த பதவியில் இருந்தாலும் பெண்களின் திருமணம் தடையாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் காலம் கடந்தமையால் இவளுக்கு நன்மை பயக்காவிடினும் எதிர்கால பெண்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.

ஆகவே பெண்களே நான் என்ற வட்டத்துக்குள் இருக்காது நாம் என்ற ஒரு சிந்தனையிலேயே எமது உரிமைக்காக போராட வேண்டும்.

நம்மில் பல பெண்கள் நாம் அடிமை என்ற சிந்தனையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இது எம்மில் மாற்றப்பட வேண்டும்.

முன்பு குளத்திலும் ஆற்றிலும் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் தற்காலத்தில் மறைவாக அமைக்கப்பட்டிருக்கும் குளியறையில் கூட சுதந்திரமாக குளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

காரணம் இதற்குள்ளும் சீசீரிவி கமரா மறைவாக பொருத்தி வைத்துள்ளார்களோ என்ற அச்சம் பெண்களுக்குள் தோன்றியுள்ளது.

இப்பொழுது குழந்தைகள் தொடக்கம் வயது முதிர்ந்தவர்கள் வரை பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

பெண்கள் எங்கும் எந்தவித அச்சமும் இல்லாது நடமாடுகின்றார்களோ அப்பொழுதுதான் பெண்களுக்களுக்கு உரிமை கிடைத்தமாதிரி இருக்கும்.

இருந்தும் பெண்களுக்கு பல நல்ல சந்தர்ப்பங்கள் வழங்கினாலும்  அவற்றை பெண்கள் பயன்படுத்தாது கூட்டுக்குள் அடைப்பட்டிருக்கும் விலங்குகளாக காணப்படுகின்றனர்.

ஒரு பெண்ணால் தாயாயால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை. ஆகவே பெண்கள் அச்சம் கொள்ளாது சமூகத்துக்கு தொண்டு ஆற்றும் வீர மங்கையாக செயலாற்ற வேண்டும்.

நரேந்தினை விவேகானந்தராக மோகன்தாஸ் என்பவரை மகாத்மா காந்தியாக முட்டாள் என்று எழுதி கொடுத்து விட்ட எடிசனை விஞ்ஞானியாக  வீடு வீடாகப் பேப்பர் போட்டுச் சென்ற அப்துல் கலாமை இந்திய குடியரசு தலைவராகவும் அணு விஞ்ஞானியாகவும் மாற்றி அமைத்தது இவர்களின் ஏழை தாய்களான பெண்ணினமே என்பதை நாம் மறக்கலாகாது.

சமூகத்துக்காக தங்கள் பிள்ளைகளை உருவாக்கிய அவர்களின் ஏழை தாய்மாரால் முடியுமென்றால் இங்குள்ள பெண்களாகிய எம்மால் ஏன் முடியாது என்ற சிந்தனையோடு நாம் எமது பிள்ளைகளை சமூகத்தை உருவாக்க வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.