ஈழத்தமிழர்களின் பலமும் சுதந்திரமுமே இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர்

(சுமன்)

இலங்கையில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும், அரசியல் இருப்புமே இந்தியாவிற்கு பாதுகாப்பாக அமையும். இதனை இந்தியா என்றுமே உணர்ந்ததில்லை. இந்தியா தொடர்ச்சியாக இதே நிலைமையைக் கையாளுமாக இருந்தால் இலங்கையில் இந்தியாவிற்கான அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு பாரியளவிலான பின்னடைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும். ஈழத்தமிழர்களின் பலமும் சுதந்திரமுமே இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களின் சமகால அரசியல் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழர்களின் விடயத்தில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இல்லையேல் அது இந்தியாவிற்கே ஆபத்தாக அமையும். இன்றைய உலக அரசியல் ஒழுங்கில் அமரிக்கா சீனா போன்ற நாடுகளின் நகர்வுகள் இலங்கையைக் குறி வைக்கின்றன. அதற்கு இந்தியா பலிக்கடாவாக ஆகக் கூடாது. இன்று இலங்கையைக் கையாள்வதற்கு இந்தியாவிற்கு ஒரே ஒரு வழியே உள்ளது. அது ஈழத்தமிர்களை விட வேறு வழியில்லை.

கடந்த காலங்களில் இலங்கையை முழுமையாகக் கைப்பற்றி தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டது. தென்னிலங்கையிலே பல நகர்வுகளை மேற்கொண்டது. ஆனால் அனைத்து நகர்வுகளும் முறியடிக்கப்பட்டு இன்று அமெரிக்கா சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கமே தென்னிலங்கையில் இருந்து வருகின்றது. அந்த நாடுகள் தற்போது ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தங்கள் நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றன.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பகுதியில் பலம் வாய்ந்த சக்தியாக ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் சுயநிர்ணய உரிமையும், அரசியல் இருப்பும் இங்கு தக்க வைக்கப்படுமாக இருந்தால் அது இந்தியாவிற்கே பாதுகாப்பானதாக அமையும். இதனை இந்தியா என்றுமே உணர்ந்ததில்லை. இன்றும் அவ்வாறான ஒரு நிலைiயைத் தான் இந்தியா கடைப்பிடித்து வருகின்றது. இந்தியா தொடர்ச்சியாக இதே நிலைமையைக் கையாளுமாக இருந்தால் இலங்கையில் இந்தியாவிற்கான அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு பாரியளவிலான பின்னடைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்.

இன்று இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் என்பது ஒரு மாகாணத்திற்குள்ளே முடக்கப்பட்டுள்ளது. அதுவும் எதிர்காலத்தில் பலவீனமான நிலையாகவே இருக்கும். ஏனெனில் மிக வேகமாக உலக வல்லாதிக்க சக்திகள் இலங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இன்று இந்து சமுத்திரப் பிராந்தியம் இந்தியாவின் கையில் இருந்து நழுவும் நிலைமையே காணப்படுகின்றது. இது தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் நிலைமையை இன்னும் மோசமாக்கும். அந்த வகையில் தமிழர் தாயக அரசியலிலும் தமிழ் மக்களின் பலம் சிதைக்கப்பட்டு அது பல கூறுகளாக உடைக்கப்படும். அந்த நிலை உருவாகுமாக இருந்தால் எதிர்காலத்தில் ஈழத்தில் தமிழர்களின் இருப்பும் கேள்விக்குறியாக மாறி அது இந்தியாவிற்கும் பாதகாமாக அமையும். எனவே ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும். இதனை ஈழத்தமிழர் சார்பில் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த விடயங்களை நாங்கள் இந்தியாவிற்குப் பல தடவைகளில் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயக அரசியலிலும் மேற்கத்தைய நாடுகளின் அரசியல் நகர்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலம்பொருந்திய தமிழ் அரசியற்கட்சிகளுக்குள் ஊடுருவல், அந்தக் கட்சிகளில் தலைமைத்துவங்களுக்கு தங்களின் முகவர்களாகச் செயற்படுபவர்களை உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவிலும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இவ்வாறான செயற்பாடுகள் தெடர நாங்கள் விரும்பவில்லை. இந்தியா சிந்தித்துச் செயற்பட வேண்டிய காலம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இதனை உணர்ந்து ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழ் அரசியற் தலைவர்களும், இந்தியாவும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு நாங்கள் இந்தியாவை எப்போதும் அரவணைத்துச் செல்லும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.

இன்று இலங்கை அரசியல் என்பது தனித்துவமாக முடிவெடுத்து செயற்படுகின்ற நிலைமையில் இல்லை. பல நாடுகளின் முகவராகச் செயற்பட்டு ஒரு ஆபத்தான சூழலில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த ஆபத்தில் இருந்து மீள்வதற்கான சூழலும் தற்போது இல்லை. எனவே பலம்பொருந்திய நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் இலங்கைக்குள் ஊடுருவி இல்கையைக் கைப்பற்றி எதிர்காலத்தில் மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திற்குள் கொண்டு சென்று இலங்கையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றது. இதனை தமிழர்களும், தமிழ் அரசியல்தலைவர்களும் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

எமக்காக எமக்கு அங்கீகாரத்தை வழங்கக் கூடிய நாடுகளுடன் நாங்கள் பேச்சுவாhத்தைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எமது மக்களின் இருப்பை நாங்கள் இங்கு தக்க வைத்துக் கொள்வதற்காக உண்மைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்து இந்தியா ஒரு மௌனத்தையே கையாண்டு வந்தது. அதிலும் ஈழத்தமிர்கள் விடயத்தில் இந்தியா எவ்வித முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் அனைத்து விடயங்களையும் இந்தியாவிற்குத் தெரியப்படுத்தியுள்ளோம். அதனடிப்படையில் சில மாற்றங்கள் நிகழக் கூடிய வாய்ப்புகள் காணப்பட்டது. இந்தியாவிற்கான அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டன. அதிலும் முக்கியமாக தமிழர் தாயகப் பகுதியல் இந்தியாவின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் ஈழத்தமிழர்கள் தெளிவாக இருந்தார்கள். இந்தியா அர்ப்பணிப்போடு அந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முன்வரவில்லை.

இந்தியாவின் அசமந்தப் போக்கின் காரணமாக தற்போது இந்தியாவிற்கு எதிரான நிலைமைகள் தோன்றுகின்றன. அது எதிர்காலத்தில இந்தியாவினுடைய செயற்பாடுகளுக்கு இலங்கையின் அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை கோர வேண்டிய சூழ்நிலையும் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

எம்மைப் பொருத்தவரையில் எமது மக்களுக்கான உரிமைக்காக ஆயுதமேந்தி நீண்டகாலமாகப் போரடி எமது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் நாங்கள். அந்தவகையிலே ஈழத்தமிழர்களின் சுதந்திரம், சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் வரை தொடர்ந்து ஜனநாயக வழியில் நாம் போராடுவோம் என்பதை எமது மக்களுக்குத் தெரிவிப்பதேடு எதிர்காலத்தில் எமது மக்களுடைய உரிமை தொடர்பில் உண்மையாகச் செயற்படக் கூடிய தலைவர்களைத் தெரிவு செய்து தமிழினத்தின் இருப்பை ஈழத்தில் உறுதி செய்யக்கூடிய நிலைப்பாடுகளை தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும் என அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கை நாடு என்பது ஒரு மிக மோசமான நெருக்கடியான நிலைக்குச் சென்று கொண்டிருககின்றது. இது சிங்கள மக்களுக்கு மட்டுமல்லாது தமிழர்களுக்கும் பாரிய விளைவகளை ஏற்படுத்தும். அந்த வகையில் சரியான தலைவர்களைத் தேர்தெடுக்க வேண்டிய காலம் தற்போது உருவாகியிருக்கின்றது. இந்த நிலைமையை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எமது அரசியற் தலைவர்களும் தங்களது தனிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை எமது மக்களுக்கு வழங்கி எதிர்காலத்தில் எமது மக்களின் இருப்பை அழித்து விட வேண்டாம் என நாங்கள் உங்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே மிக வேகமான முறையில் இந்திய மத்திய அரசாங்கம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் முன்வந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படத் தவறுமாக இருந்தால் இந்தியா மிக மோசமான நிலைiயை அடையும். ஈழத்தமிர்களின் சுயநிர்ணய உரிமை இலங்கையிலே அங்கீகரிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் பலமும் சுதந்திரமுமே இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். இதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இந்திய மத்திய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.