ஒன்பது நாட்களாக மூடிக்கிடக்கும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை!

ஆளுநர் தலைமையில் திருமலையில் கூட்டம்.
( வி.ரி. சகாதேவராஜா)
 கடந்த ஒன்பது நாட்களாக  காலமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பினால் மூடிக்கிடக்கின்றது.
இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ்மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள் .
அவசர சிகிச்சைகளுக்காக அப்பிரதேச மக்கள்  காலநேரபணம் செலவுசெய்து அக்கரைப்பற்று வைத்திய சாலைக்கு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர்.
இது தொடர்பாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் மர்சூத்திடம் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டபோது..
வைத்தியசாலை செயற்பாடுகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. இன்று (19 செவ்வாய்க்கிழமை) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு செயலாளர், கிழக்கு மாகாண பணிப்பாளர், பிராந்திய சுகாதார  சேவை பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினரின் கலந்துரையாடல் கூட்டம் இங்கு நடைபெறவிருக்கிறது.அதன்பின்னர் முடிவுகள் தெரியவரும் என்றார்.
இதேவேளை, நேற்று  திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வுக்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் பிரதேச செயலாளரும் வைத்தியசாலை மூடப்பட்டு கிடப்பது தொடர்பாகவும் அது  திறக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் தெரிவித்தார்கள்.
அதற்கு, அவர் நாளை (20) புதன்கிழமை திருகோணமலையில்  கூட்டம் இடம்பெறும். அதில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தொடக்கம் சம்பந்தப்பட்ட  சகலரையும் அழைத்துள்ளார்.
அதன்படி நாளை(20)  புதன்கிழமை  திருமலையில் நடைபெறும் இறுதி கட்ட கூட்டத்திற்கு பிற்பாடு வைத்தியசாலை திறப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க, ஒரு வாரத்துக்கு முன்பு மரதன் ஓடிய ஒரு மாணவனின் இறப்பைத் தொடர்ந்து அங்கு வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதும் அதன் போது வைத்தியசாலை கண்ணாடிகள் பெயர் பலகைகள் உடைக்கப்பட்டதும் தெரிந்ததே.
 இதனை அடுத்து தங்களுக்கு பாதுகாப்பின்மை என்று கூறி வைத்தியர்கள் வெளியேறினார்கள்.
 அதனால் அன்றிலிருந்து இன்று(19) செவ்வாய்க்கிழமை வரை ஒன்பது நாட்களாக வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. அங்கே எவ்விதமான வைத்திய சேவைகளும் இடம் பெறவில்லை.
 இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் பாம்புக்கடி தூக்கிட்டு தற்கொலை முயற்சி போன்ற பல நோயாளிகள் வந்தும் அதை நேரடியாக அக்கரைப்பற்று ஆதரவைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது.
 இவ்வேளையில் வைத்தியசாலை மீள திறக்கப்பட வேண்டும். பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது  என்ற நோக்கில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர், பிரதேச செயலாளர்  உள்ளிட்ட பல பொது அமைப்புகள் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவிக்கையில் தான்மறுநாளே அங்கு பயணித்து வைத்திய அத்தியட்சகர்  போலீசார் மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆகியோரோடு தொடர்பு கொண்டு நிலைமையை தணிக்க முயற்சித்ததாகவும் வைத்திய சாலையை மீளத்திறக்க முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
 பின்பு போலீசாரின் பாதுகாப்பு கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் பேசி வைத்தியசாலை பாதுகாப்பிற்கு பொலிசாரை அமர்த்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை நாளைய கூட்டத்திலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இதேவேளை அரச வைத்தியர்கள் சங்கம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.
மாணவனின் மரணம் மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக திருக்கோவில் போலீசார் வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் கடந்த ஒன்பது நாட்களாக வைத்திய சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருப்பினும் நாளைய தினம்(20)  புதன்கிழமை ஒரு முழுமையான கலந்துரையாடல் ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னிலையில் திருமலையில் இடம் பெறும் கூட்டத்தின்போது வைத்தியசாலை திறக்கப்படுவதற்கான சாதகமான அறிகுறி தென்படுமென்று பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன்  அறிவித்தார்.
முதலில் வைத்திய சாலையை திறந்து பொது மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவையை வழங்குங்கள். பிறகு உங்கள் விசாரணகளை நடாத்துங்கள். குற்றப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள் தேவையில்லாதோர் என்று இனம் கண்டால்  இடம் மாற்றுங்கள்.
எதற்கும் முதலில் வைத்திய சாலையை திறந்து இயக்கச் செய்யுங்கள் என்று பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.