முன் அறிவித்தல் இன்றி மரதன் ஓட்டப் போட்டியை இடைநிறுத்தியதால் போராட்டம் வெடித்தது.

( வாஸ் கூஞ்ஞ)

நடைபெற இருந்த மரதன் ஓட்டப் போட்டியை எவ்வித அறிவித்தலும் இன்றி இடை நிறுத்தியமையால் போட்டிக்கு தயார் நிலையில் வந்த மாணவர்கள் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தமையால் மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பெற்றோர்   திடீரென பாடசாலைக்கு முன்னால் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

செவ்வாய் கிழமை (12) இப் பாடசாலையில் வருடாந்த மெய்வல்லுனருக்கான விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக செவ்வாய் கிழமை (12) காலை 5 மணிக்கு மரதன் ஓட்டப் போட்டி நடைபெறுவதற்கான சகல ஆய்த்தங்களும் நடைபெற்ற நிலையில் பெற்றோர் மாணவர்கள் இந் நிகழ்வுக்காக பாடசாலைக்கு சமூகம் அளித்திருந்தனர்.

ஆனால் இந்த பாடசாலை அதிபரோ ஆசிரியர்களோ உடற்பயிற்றி ஆசிரியர்களோ சம்பவ இடத்துக்கு சமூகமளிக்காது இருந்தமையால் பெற்றோர் பெரும் கவலைக்கு உள்ளாகியதாக தெரிவித்தனர்.

எந்தவித முன் அறிவித்தல் வழங்காது இந்த மரதன் ஓட்டப் போட்டியை நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியதாகவும்

இதனால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்குள் செல்ல விடாது தவிர்த்து பாடசாலைக்கு முன்னால் காலை தொடக்கம் பதாதைகள் ஏந்தியவாறு அதிபருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் எந்தியிருந்த பதாதைகளில் ‘சமூகப் பிரச்சனையை பாடசாலைக்குள் கொண்டு வராதே’ ;பாடசாலைக்காக அதிபரா? அதிபருக்காக பாடசாலையா?’ ‘ஓடி ஒழியாதே எங்கள் பிள்ளைகளை ஓட விடு’ ‘மாணவர்கள் கல்விக்கு நீதி வேண்டும்’  ‘பாடசாலையை சீர்குலைக்கும் அதிபர் வேண்டாம் அதிபரே வெளியேறு’ என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மன்னார் கல்வி திணைக்கள அதிகாரிகளின் கவனத்துக்கு பெற்றோர்களால் கொண்டு சென்றதும் சம்பவ இடத்துக்குச் சென்ற மன்னார் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ப.சந்தியோகு மற்றும் வலய பிரதிநிதி பிறின்ஸ் டயஸ் ஆகியோர் பெற்றோரையும் ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடியிருந்தனர்.

ஆனால் அதிபர் இன்று (12) பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பெற்றோர்களால் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்று வருகை தந்திருந்த அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதை தாங்கள் கவனத்துக்கு எடுத்து மன்னார் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி செயலாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் கலைந்து சென்றது.

ஆனால் தங்கள் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமாட்டோம் எனவும் பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.