மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலையம் நடாத்திய சுப்பிரமணியம் லோகநாதன் எழுதிய “மனநலம்” நூல் வெளியீடு சனிக்கிழமை (09) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலைய ஸ்தாபகர் அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி புளோரன்ஸ் பாரதி கென்னடி மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
நிகழ்வில் ஆசியுரையையும், பிரார்த்தனையையும் இணைந்ததாக தொழில்சார் உளநல உதவி நிலையப் பணிப்பாளர் அருட்பணி ஜீவராஜ் நிகழ்த்த, வரவேற்பு நடனத்தை நிருத்திய கலாலயாவின் மாணவி வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை தொழில்சார் உளநல உதவி நிலைய அபிவிருத்தி மற்றும் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஐ.ஜே.சில்வெஸ்டரும், நூலாசிரியர் சுப்பிரமணியம் லோகநாதன் லண்டனிலிருந்து நிகழ்நிலையூடாக நூலாசிரியர் உரையினையும் நிகழ்த்தியுள்ளார்.
மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலையப் பணிப்பாளர் அருட்பணி ஜீவராஜ் நூலின் முதன்மைப் பிரதிகளை நிகழ்வின் முதன்மை அதிதிகள் மற்றும் பிரமுகர்களுக்கு வழங்கி வைத்தார்.
நிகழ்வின் சிறப்புரையினை “உளநலம் ஒரு சமூகப் பார்வை” எனும் தலைப்பில் மகுடம் வி.மைக்கல் கொலினும், நூல் நயவுரையினை மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் முருகு. தயானந்தாவும், நூல் ஆய்வுரையினை ஜே.ஐ.எஸ்.ஏ பணிப்பாளர் அருட்பணி எஸ்.பெனியும், ஏற்புரையினை மட்டக்களப்பு கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசகர் அ.ஜெயநாதனும் ஆற்றியுள்ளனர்.