மருதமுனையில் நாணல் சங்கை வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  மருதமுனை நாணல் கலை இலக்கிய வட்டம்  “அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வின் மலர் வெளியீடும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும், மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹும் கலாபூசணம் பி.எம்.எம்.ஏ.காதர் நினைவரங்கில் அமைப்பின் தலைவி பாத்திமா சூபா தலைமையில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கிய வித்தகர் விருது பெற்ற நாணல் கலை இலக்கிய வட்டத்தின் உறுப்பினரும் எழுத்தாளருமான ஆசிரியர் மசூறா சுஹூறுத்தீன், இலக்கிய வட்டத்தின் ஊடக ஆலோசகராக இருந்து 2022 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஊடகத்துறைக்கான இளம் கலைஞர் விருது பெற்றுக் கொண்ட ஊடகவியலாளர் ஏ.எல். எம்.ஷினாஸ், மருதமுனையின் முதலாவது பெண் கவிஞரான திருமதி மாஜிதா தவ்பீக் ஆகியோர் விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

நாணல் கலை, இலக்கிய வட்டம் வருடா வருடம் நடாத்தி வருகின்ற மகளிர் தின நிகழ்வின் போது சிறந்த சாதனைத் தாய்மார்களை பாராட்டி கௌரவிப்பது வழமை அந்த வரிசையில் இம்முறை சிறந்த சாதனை தாயாக இருவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். ஒருவர் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம் அவர்களுடைய தாயாரான  முஹம்மது இஸ்மாலெப்பை செய்னப்பு, மற்றவர் ஏ.ஆர். சித்தி நயீமா ஆவார்.

நாணல் சஞ்சிகையினுடைய முதல் பிரதி பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிறஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் கையளிக்கப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது. நாணல் கலை இலக்கிய வட்ட உறுப்பினர்களின் கலை கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதோடு, அறிவிப்பாளர் சந்திரபேஸ் கஜானா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி, ஸ்ரீலங்கா சென்ஜூடி பரா மெடிக்கல் கல்லூரி பணிப்பாளர் எம்.எம். சப்றாஸ் மன்சூர், இன்ஸிரியூட் ஒப் கிளைமேட் சேன்ச் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.பி.ஸியாரத்துல் பெறோஸ் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன் கலாசார உத்தியோகத்தர்கள் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.