எதிர்க்கட்சித் தலைவரின் மகா சிவராத்திரி தின செய்தி

சிவனுக்கு ஓர் இராத்திரி என்பதற்கு இணங்க,

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பக்திபூர்வமாக அனுட்டிக்கப்படும் விரத தினமான ‘மகா சிவராத்திரி’ இன்றாகும்.

இந்துக்கள் சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்து, சிவ சிந்தனையுடன்  கண்விழித்திருந்து நான்கு ஜாம பூஜை வழிபாடுகளில் பங்குபற்றுவார்கள்.  இராத்திரி முழுவதும் விழித்திருப்பதற்காக அருகில் உள்ள சிவாலயங்கள் அல்லது ஏனைய ஆலயங்களுக்குச் சென்று ஆடல் அரசன் சிவனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் இயல் மற்றும் இசை நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதுடன், நான்கு ஜாம பூசைகளிலும் பங்குபற்றி சிவன் அருள் பெறுவார்கள்.

இரவில் விரதம் இருந்து சிவபெருமானை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என  இந்துக்கள் நம்புகின்றனர்.

சிவனை வழிபட்டால் உடல், உள ஆரோக்கியம் ஏற்படுவதுடன், மரணத்திற்குப்  பின்னரான மோட்ச வாழ்க்கை ஏற்படும் என்பது இந்து பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஆரோக்கியமான, ஞான அறிவு கொண்ட குடிமக்களின் தலைமுறை ஒரு நாட்டிக்கு பெருமையாகும். அது ஒரு நாட்டின் உயிர்நாடியாகும்.

சிவபெருமானின் இரவைக் கொண்டாடும் இத்தருணத்தில், நம் நாட்டுக்  குடிமக்களிடம் உள்ள இருள் நீங்கி, ஞான ஒளி பிரகாசிக்க, வளமான தானியங்களும், பயிர்களும் கிடைக்க, களஞ்சியங்கள் நிரம்பி மக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் நிறைந்த அழகான புதிய நாட்டை உருவாக்கும் சவாலை, இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் வெற்றிகொண்டு, தாய் நாடு வளம் பெற  பிரார்த்திக்கின்றேன்.

 

சஜித் பிரேமதாச

 

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர்