மன்னார் தீவில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு கொண்ட கையெழுத்து அறிக்கை கையளிப்பு

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவற் காற்றாலை சக்தி திட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பிட்டறிக்கையை முப்பது நாட்களுக்குள் எழுத்து மூலம் தெரிவிக்கும்படி மன்னார் மக்களுக்கு  விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் தீவு மக்கள் கையொப்பம் இடப்பட்ட கோவைகளை மன்னார் பிரஜைகள் குழு கொழும்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று கையளித்துள்ளது.

இலங்கை நிலைபெறுசக்தி அதிகார சபையினால் சமர்பிக்கப்பட்ட மன்னார் மாவட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவற் காற்றாலை சக்தி திட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பிட்டறிக்கை செயற்திட்டத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை 2024.01.23 ஆம் திகதி முதல்; குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வேலை நாட்களில் காலை 8.45 மணி தொடக்கம் மாலை 4.15 வரை 30 நாட்களுக்கு பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டாம் கட்ட காற்றாலையை மன்னார் தீவில் அமைக்க வேண்டாம் என மன்னார் தீவு மக்கள் கண்டனப் போராட்டங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றபோதும்

250 மெகாவாற் காற்றாலையை மன்னார் தீவில் அமைக்க வேண்டாம் என தெரிவித்து மன்னார் தீவில் 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதற்கான எதிர்ப்பபைத் தெரிவித்து தங்கள் கையெழுத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவிடம் கையளித்திருந்தனர்.

இந்த காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமபுற மக்கள் பொது அமைப்புக்கள் என 7925 நபர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மதிப்பீடு அறிக்கை சமர்பிக்கும் இறுதி நாளாக 06 ந் திகதி (06.03.2024) காணப்பட்டமையால் செவ்வாய் கிழமை (05) மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் அருட்பணி மாக்கஸ் அடிகளார் தலைமையில் மும்மத பிரதிநிதிகளாக மௌலவி அசீம் , சட்டத்தரனி எம்.எம்.சபூர்தீன் , ஓய்வுநிலை எந்திரி எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன் , முன்னாள் நகர சபை பிரதித் தலைர் யேசுதாசன் ஆகியோர் கொழும்பிலுள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையினரிடம் மக்களின் எதிர்ப்பு அறிக்கையை ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன் இதன் பிரதியையும் கொழும்பு மனித உரிமை ஆணைக் குழுவிடமும் கையளிக்கப்ட்டுள்ளது.