மன்னாரில் சிறந்த விதை நெல் உற்பத்தியாகுவதால் இதையே மன்னாரில் பாவிக்க கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மன்னார் அரச அதிபர் கனகேஸ்வரன்

(வாஸ் கூஞ்ஞ)

வேறு இடங்களிலிருந்து இங்கு விதை நெல்லைக் கொண்டு வருவதை விடுத்து மன்னாரில் சிறந்த விதை நெல்லு உற்பத்தி இரனைஇலுப்பைக்குளத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் இங்குள்ள நெல்லை விதை நெல்லாக பாவிப்பதற்கான ஏற்பாடுகளை மன்னார் மாவட்ட  விவசாயம் சார்ந்த திணைக்களங்கள் கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் அரச அதிபர் கே.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை (28) மன்னார் இரனைஇலுப்பைக்குளத்தில் அங்குள்ள விவசாய அமைப்பின் ஏற்பாட்டில் நெல் அறுவடை விழா நடைபெற்றபோது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட  மன்னார் அரச அதிபர் கே.கனகேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்

விவசாயம் என்பது எமக்கு மிகவும் முக்கியமான செயல்பாடாகும். விவசாயம் எமது பாரம்பரியமான ஒரு தொழிலும் ஆகும்.

இது இயக்கையுடன் இணைந்து செயல்படும் ஒரு தொழிலாகும். இன்றைய நாளில் (28) இரணைஇலுப்பைக்குளம் விவசாயிகள் தங்கள் பாரம்பரிய முறையிலான செயல்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

அதாவது இங்குள்ள விவசாயிகள் அமைப்பினரும் மற்றும் விவசாயிகளும் இன்றைய நாளில் (28) நெல் அறுவடை விழாவை நடாத்துகின்றனர்.

நானும் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதனால் இந்நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த இரணைஇலுப்பைக்குளம் மன்னார் மாவட்டத்தில் மிகவும் தொலைவிலுள்ள ஒரு கிராமம். விவசாய பணிப்பாளர் சொன்னார் இந்த இடத்தில் விவசாயத்துக்கு எந்தவித களைகளும் இல்லாத ஒரு இடம் என தெரிவித்தார்.

அத்துடன் இங்கு நல்லதொரு விவசாயம் மேற்கொள்ளப்படும் சிறந்த இடம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆகவே இந்த இடத்தில் விளையும் நெல்லையே இங்குள்ள விவசாயிகள் விதை நெல்லாகவும்  பாவிப்பது சாலச் சிறந்தது.

நாம் வேறு இடங்களிலிருந்து இங்கு விதை நெல்லைக் கொண்டு வருவதை விடுத்து இங்குள்ள நெல்லை விதை நெல்லாக பாவிப்பதற்கான ஏற்பாடுகளை மன்னார் மாவட்ட  விவசாயம் சார்ந்த திணைக்களங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் மிகவும் முக்கியமானவர்கள் என்பது எமக்குத் தெரியும். ஒருவரிலும் தங்கி வாழாது சுயாதீனமாக செயல்படுபவர்கள்.

திருக்குறல் உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார் மாவட்டம் ஒரு விவசாய மாவட்டம். ஆகவே விவசாயத்தை அபிவிருத்தி செய்யும்போது எமது பொருளாதாரம் விருத்தி அடையும்.

திருக்குறலில் தெரிவிக்கப்பட்டுள்ளதுபோல என்னிடம் ஒன்றுமே இல்லையே என்று கஷ்டப்படுபவர்கள் சொல்லும்போது இந்த பூமித் தாய் தனக்குள்ளே சிரித்துக் கொள்வாளாம்.

அதாவது இங்கு நல்ல வளமான வளங்கள் இருக்க இதை பயன்படுத்தத் தெரியாமல் இருக்கின்றார்கள் என நினைத்துக் கொள்வாளாம் இந்த பூமி.

ஆகவேதான் மன்னார் மாவட்டம் நல்ல வளம் கொண்ட மாவட்டம் இதை நாம் தகுந்த முறையில் பயன்படுத்தினால் வறுமை என்பது எம்மிடம் இருக்காது என மன்னார் அரச அதிபர் கே.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.