கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு நேற்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக கோட்டை வளாகத்தில் இடம்பெற்றது.

கற்புலக் கலைத்துறை விரிவுரையாளரான ஏ.எல்.அஸ்மர் ஆதமின் வழிகாட்டுதலின் கீழ், கற்புலக் கலைத் தொழில் நுட்பத்துறையில்  2ஆம் வருடத்தில் கல்வி கற்கும் சுமார் 70 மாணவ மாணவிகள் தமது 2ஆம் கல்வித் தவணைக்கான வெளிக்கள ஓவியச் செயற்பாடுகள் என்ற பாடத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் தமது ஓவியங்களை வரைந்து வருகின்றார்கள்.அதற்கிணங்க, பாசிக்குடா மற்றும் கல்லடிக் கடற்கரைகளில் தமது ஓவியங்களைத் தீட்டிய மாணவர்கள் மூன்றாவது கள இடமாக 400 வருடங்கள் பழமை வாய்ந்த மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையைத் தெரிவு செய்துள்ளனர்.

இம்மாணவர்கள் இக்கோட்டையில் காணக்கிடைக்கும் புராதனக் கட்டடக் கலை அம்சங்களை இயற்கைச் சூழலுடன் இணைந்ததாக ஓவியத்தின் மூலமாக வெளிப்படுத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.