அரசாங்கத்தின் நுண்கடன் செயற்றிட்டத்தினால் வாழ்வாதாரம் முன்னேற்றமடைகின்றது.

(சர்ஜுன் லாபீர்)  நாட்டில் வறுமையைப் போக்கி நிலை பேறான அபிவிருத்தியை நிலை நாட்டுவதற்கு தற்போதைய அரசாங் கம் முனைப்புடன் பல்வேறுபட்ட தேசிய திட்டங்களை அமுல்படுத் திக்கொண்டு வருகின்றது. இச்செயற்றிட்டங்களை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கின்றபோது நாட்டில் வறுமையை இல்லாமல் செய்து நிலைபேறான அபிவிருத்தியை நிலை நாட்டலாம்  என்று சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கிராம சக்தி தேசிய வேலைத்திட்டத்தில் சுழற்சி முறையிலான நுண் கடன் வாழ்வாதார உதவித்தொகை வழங்கும் நிகழ்வு  சம்மாந்துறை புளோக் ஜே வெஸ்ட்-02 (Block “J” West -2)கிராம சேவை பிரிவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ ஜெஸீலா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் கிராம சக்தி நிகழ்ச்சித் திட்டத்தில் நாட்டில் 5000 பின்தங்கிய கிராமங்களை தெரிவு செய்து அக்கிராமங்களை முழுமையான முறையில் வறுமையிலிருந்து விடுவித்து அபிவிருத்தியடைய வைப்பதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டில் முறையற்ற விதத்தில் பதிவுகளை மேற்கொண்ட சில தனியார் நிதி நிறுவனங்கள்

நுண்கடன் செயற்றிட்டங்களுடாக வாழ்வாதார கடன் உதவிகளை வழங்கி அதனூடாக பல்வேறுபட்ட சமூகவியல் பிரச்சினைகள் ஏற்பட்டு அவை மரணம் வரை கொண்டுசென்ற விடயங்களை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்றோம். இச் செயற்றிட்டங்களை முறையாக செயற்படுத்தி மக்களுக்கு சுமைகளை வழங்காமல் அரசாங்கம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதனூடாக நாட்டில் வறுமையை ஒழித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்   என குறிப்பிட்டார்.

மேலும் இக் கிராமத்தில் சுமார் 1.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  நுண்கடன் செயற்திட்டம் நான்கு கட்டங்களாக சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருகின்றமையானது இக்கிராமத்தில் இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்கின்றார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

இந்நிகழ்வில் விடயத்துக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம் பௌஸான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் நியாஸ் உட்பட சங்க நிர்வாக உறுப்பினர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.