விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு  செயலமர்வு. 

(பாறுக் ஷிஹான்)  நமது நாட்டின் அரசியல் யாப்பின் பன்முகத்தன்மைக்கமைவாக விவாக, விவாகரத்து சட்டம் 1951 முதல் அமுலில் இருந்து வருகின்றது. எனினும், தற்பொழுது இச்சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பாக நமக்குள்ளும் வெளியிலும் பல்வேறுபட்ட கருத்தாடல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
 முரண்பாடான பார்வை இத்தரப்புக்களிடையே காணப்படுவதால் இவ்விடயத்தில் கருத்தொற்றுமையினை உருவாக்கும் அடிப்படையில், இந்நாட்டில் இஸ்லாமிய சட்டவியல் கற்கை நெறியினை விஷேட கற்கை நெறியாக பல்கலைக்கழக மட்டத்தில் போதிக்கின்ற அரச நிறுவனமாகத் திகழும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபுமொழி பீடம்,  முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான புலமைசார் செயலமர்வொன்றினை நடாத்த ஏற்பாடுசெய்துள்ளது.
மேற்படி நிகழ்வானது, 02 மார்ச் 2024 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபுமொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெறும் இச்செயலமர்வுக்கு குறிப்பிட்ட துறைசார் நிபுணர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் அழைக்கப்படவுள்ளனதாக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட பீடாதிபதி அஷ்ஷேய்க். எம்.எச்.ஏ. முனாஸ் தெரிவித்துள்ளார்