இம்ரான் ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்கா சதி ? பாகிஸ்தானில் இராணுவ பொம்மை அரசு !

ஐங்கரன் விக்கினேஸ்வரா
பாகிஸ்தானில் நடைபெற்ற போதுத்தேர்தல் முடிவுகள் இராணுவத்திற்கும், மேற்கத்தய அரசுகளுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இம்ரான் ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்கா சதி :
பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்த இம்ரான்கானின் ஜனநாயக அரசு சூழ்ச்சிகரமாக கவிழ்க்கப்பட்டதாகவும்,
இந்தச் சதியைத் திட்டமிட்டது அமெரிக்காதான் என இம்ரான்கான் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

அது மட்டுமின்று, இம்ரான்கான் மீது பாகிஸ்தான் அரசு பலவிதமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறையில் அடைத்தது. அவர் கிரிக்கெட் வீரர் என்றபடியால் தனது கட்சியின் தேர்தல் சின்னமாக வைத்திருந்த கிரிக்கெட் மட்டை சின்னத்தையும் முடக்கியது. இருந்தும் அவரது கட்சி தேர்தலில் சுயேட்சாயாகப் போட்டியிட்டு ஆகக்கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
இம்ரான்கானின் வெற்றி பாகிஸ்தானின் ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் இராணுவ அதிகார வர்க்கத்துக்கும் மரண அடி கொடுத்துள்ளது. அத்துடன் அமெரிக்க, மேற்கத்தய அரசுகளுக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் உள் விவகார தலையீடு:
இம்ரான் கான் அமெரிக்கா மீது கூறியுள்ள  குற்றச்சாட்டு எவ்வாறு இருப்பினும், அமெரிக்கா பலமுறை பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுள்ளது.
அமெரிக்கா மற்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.  1953 ஆம் ஆண்டு,  ஈரான் நாட்டில் முகமது முஸ்தாக்  ஆட்சியை கலைத்தது. பானாமாவில் நடந்த ஆட்சி மாற்றம்; துருக்கி முதல் ஈராக் வரை அமெரிக்கா பல நாடுகளில்  பல மாற்றங்களை செய்துள்ளமை அறிந்ததே.
பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா பல முறை தலையிட்டிருப்பதற்கு உதாரணங்கள் உள்ளன. 1958 ஆம் ஆண்டு, ஜெனரல் அயூப் கான் ஆட்சிக்கு வந்தார். அதன்பிறகு ஜெனரல் யாஹ்யா கான், ஜெனரல் ஸிஹாஹுல்  ஹக் மற்றும் ஜெனரல் பர்வேஸ்  முஷராப் ஆகியோருக்கு அமெரிக்காவின் ஆதரவு பலமாக இருந்தது.
சீனா போன்ற நாடுகளுக்கு எதிராக உள்ள அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கு இவர்களை பயன்படுத்திக்கொண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் நடந்த யுத்தத்திற்கு, அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்திக் கொண்டது கடந்த கால வரலாறாகும்.
பாகிஸ்தானில் ராணுவத்தில் உள்ள தலைவர்  ஒருவரையோ ஆட்சியில் இருக்க அமெரிக்கா விரும்புகிறது. எகிப்தில்  அப்துல்  ஃபதேஹ் அல்-சிசி ஆட்சி அமைத்தது போல், சீனாவை  எதிர்கொள்ள பாகிஸ்தான் அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலையை மாற்றவே, ஆட்சி  மாற்றத்தை
அமெரிக்கா விரும்பியது.
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் ஆட்சியில் இருந்தபோது அமெரிக்கா இதை செய்ய முயற்சி செய்தது.  பெனாசிர் புட்டோ  ஆட்சி, இம்ரான் கான் ஆட்சி என அனைவரது ஆட்சியிலும் அமெரிக்காவுக்கு கடினமாக இருந்தது. இதனால்
அமெரிக்கா தன் தேவைகளை நிறைவேற்ற அங்கு ஒரு ராணுவ தலைவரை ஆட்சிக்கு கொண்டு வர  அமெரிக்கா விரும்பியது.
நெருக்கடியில் பாகிஸ்தான் பொருளாதாரம் :
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி என பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அதன் பிரதமர் இம்ரான் கான் மீது எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி என அரசியல் பேரிடரிலும் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. இதிலிருந்து நாடு மீள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி என தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னர் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால், தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படுமா என்கிற கேள்வியும் எழுந்தது. இருப்பினும் நாடு முழுவதும் இன்டெர்நெட் சேவை முடக்கப்பட்டு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி நடந்து முடிந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் 101 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 90 பேர் முன்னாள் பிரதமர் இம்ரான் (Imran Khan) கானின் தரீக்கே இன்ஸாஃப் கட்சியின் ஆதரவாளர்கள் ஆவார்கள்.
புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் :
பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பையும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக மரியம் நவாசையும் நியமித்து நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் (Nawaz Sharif) பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சியும் 54 தொகுதிகளை வென்றது.
பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 854 தொகுதிகளில் நாடாளுமன்ற மற்றும் மாகாண தேர்தல் நடந்தது. இதில் அதிகபட்சமாக 348 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் பிடிஐ கட்சியை சேர்ந்தவராவார்கள். கட்சியின் கிரிக்கெட் பேட் சின்னம் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சுயேச்சையாக களமிறங்கியிருந்தனர்.
கட்சிகளைப் பொறுத்த வரையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) 227 இடங்களில் வெற்றி பெற்று, அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 160 இடங்களிலும், எம்க்யூஎம்-பி கட்சி 45 இடங்களிலும் வென்றுள்ளன.
சுயேச்சைகள் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி!
நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில், வாக்குப்பதிவு நடந்த 265 தொகுதிகளில் சுயேச்சைகள் 101 தொகுதிகளில் வென்றுள்ளனர். நவாஸ் கட்சி 75 இடங்களிலும், பிபிபி கட்சி 54 இடங்களிலும், எம்க்யூஎம்-பி கட்சி 17 இடங்களிலும் வென்றுள்ளன. மத்தியில் ஆட்சி அமைக்க 265 இடங்களில் 133 தொகுதிகளில் வெல்ல வேண்டியது அவசியம்.
இதனுடன், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான நியமன இடங்களையும் சேர்த்து மொத்தமுள்ள 336 தொகுதிகளில் 169 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை வெற்றி கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் கட்சி தீவிர முயற்சி எடுத்தார் என்பது முக்கியமானதாகும்.