( வாஸ் கூஞ்ஞ) தலைமன்னார் பொலிஸ் பிரிவில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் இக்கிராமம் சோகத்தில் மூழ்கியிருப்பதுடன் மீனவர்களும் தொழிலுக்குச் செல்லவில்லை.
இச்சம்பவம் வியாழக்கிழமை (15) தலைமன்னார் கிராமம் மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆரம்ப விசாரனை மூலம் தெரிய வருவதாவது
வியாழக் கிழமை (15) அன்று மாலை ஏழு மணியளவில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி தனது வீட்டிலிருந்து வெளியே சென்றபின் மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பாமையால் இச் சிறுமியைத் தேடி வீட்டாருடன் அக்கிராம மக்களும் இப்பிள்ளையை தேடுவதில் ஈடுபட்டனர்.
இரவு அச்சிறுமியை கண்டு பிடிக்காத போதும் அப்பகுதி பங்கு தந்தையும் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க அக்கிராம ஆண்கள் இளைஞர்கள் ஒன்று திரண்டு தேடுதலில் ஈடுபட்டபோது வெள்ளிக்கிழமை (16) அதிகாலையிலேயே இப்பிள்ளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இப்பிள்ளையின் வீட்டிலிருந்து சற்று தூரத்திலுள்ள ஒரு தென்னந் தோட்டத்துக்கு அருகாமையில் உள்ள வேலி ஓரத்திலேயே இச்சிறுமியை இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்திய பின் தோட்டத்தின் வேலியோரத்தில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இத் தென்னந் தோட்டத்து காவலாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தை தொடர்ந்து தலைமன்னார் கிராமம் மேற்கு பகுதி சோகத்தில் ஆழ்ந்திருப்பதுடன் இங்குள்ள மீனவர்கள் இன்று தொழிலுக்கு செல்லவில்லை எனவும் குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
(வாஸ் கூஞ்ஞ)