அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 402 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அனுமதி

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு இணை தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டப்ளியூ.டி.வீரசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில (14) நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரமவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தவிசாளர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எஸ்.எம்.முஸாரப், டொக்டர்.திலக் ராஜபக், உட்பட திணைக்களத் தலைவர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
கல்வி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீதி, மின்சாரம், வீடமைப்பு உட்பட அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் திணைக்கள தலைவர்களிடம் கேட்டறிந்து குறித்த வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி இங்கு வலியுறுத்தப்பட்டன.
இம்முறை அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 402 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதுடன், பொதுமக்களின் நலன் கருதி எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.