தம்பலகாமத்தில் பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா

ஹஸ்பர் ஏ.எச்_
தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இன்று (10) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயகெளரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வினை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபரை பாடசாலை மாணவ மாணவர்கள் அமோகவரவேற்பளித்தனர்.
குறித்த கலைஞர்கள் கௌரவிப்பில் ஊடகம், கலை, எழுத்து துறை என சுமார் 117 கலைஞர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டார்கள்.
இதில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி கலந்து சிறப்பித்தார். அறநெறி பாடசாலை மாணவ மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன் போது மேடை ஏற்றப்பட்டன.  மாவட்ட அரசாங்க அதிபரை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரினால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன. விசேடமாக சிரேஷ்ட கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டும் கௌரவிக்கப்பட்டார்கள்.
இதில் தவத்திரு அடிகளார் குருமகா சந்நிதானம் தென்கயிலை ஆதினம், முன்னாள் மாகாண உதவி காணி ஆணையாளர் க. ரவிராஜன், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் இலக்குமி தேவி ஸ்ரீதரன், ஆதிகோனேஸ்வரா மகாவித்தியாலய அதிபரும் கோட்டக் கல்வி அதிகாரியுமான இ.இராஜசுரேஸ்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.