கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகம் முன்பாக  ஆர்ப்பாட்டம்

(ஏறாவூர் நிருபர்நாஸர்)

கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து           நேற்று 09.02.2024 மாலை ஆர்ப்பாட்டப் பேரணியில்  ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்புவந்தாறுமூலை வளாகம் முன்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்படவேண்டும்                         மகாபொல நிதியுதவி மாதந்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் மற்றும் சிற்றுண்டிச்சாலையில் போதிய வசதிகளை ஏற்படுத்துவதுடன்          சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட  உணவு வகைகளை தேவையான அளவில் பெறக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பன                 இம்மாணவர்களது பிரதான கோரிக்கைகளாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் களுவன்கேணி பகுதியில் அமைந்துள்ள விடுதி வளாகத்திலிருந்து   தமது கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திக்கொண்டு உமா மில் வீதி மற்றும் பிரதான வீதி வழியாக  சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தைக்கடந்து             பல்கலைக்கழக வளாகத்தையடைந்தனர்.                                              சகல பீடங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள்                               இந்த ஆர்ப்பாட்டப்பேரணியில் பங்கேற்றனர்.  நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுகின்ற வசதி வாய்ப்புக்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் அரைவாசியேனும் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுவதில்லையென இம்மாணவர்கள் கூறினர். மாணவர்கள்மீது  நிருவாகத்தினரின் அடக்குமுறையை சித்தரிக்கும் வீதி நாடகமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள சுமார் ஐயாயிரம் மாணவர்களில் இரண்டாயிரம்பேர் ஒன்லைன் மூலமாக கல்வி கற்கின்றனர். ஏனைய மூவாயிரம் பேரில்          சுமார் எண்ணூறு பேர் விடுதி வசதியின்றி நிர்க்கதியடைந்துள்ளனர்.                        அதேநேரம் மூன்று தங்கும் அறைகளில் ஏழுபேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.                   இதனால் பெண்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளி இடங்களில் பாதுகாப்பான தங்குமிடங்களை வாடகைக்குப்பெறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. அதேபோன்று மாணவர்களில் அதிகமானவர்கள்      பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளவர்களாவர். இவர்களைக் கருத்திற்கொண்டு புதிதாக விடுதிக்கட்டடம் அமைக்கப்படவேண்டும். அதேபோன்று பலமாதகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள           மகாபொல நிதிக்கொடுப்பனவு                 கிரமமாக வழங்கப்பட்ட வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்தின் வசதி வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                  மாணவர்களது சேமநலன்களைப் பேணுவதற்கு பல்கலைக்கழக நிருவாகம்     நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களது இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்               பாரிய ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் செய்வதற்குத் தயாராகவுள்ளதாக மாணவர்கள் கருத்துவெளியிட்டனர்.