(பாறுக் ஷிஹான்) சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும் என வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் கருத்து தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் வியாழக்கிழமை(8) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய ஊடகவியாளர்களைச் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கும்போது
இப்பிராந்தியத்தில் பாதுகாப்பான, ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
மக்கள் சுகாதாரத்துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் வழங்கும்போதுதான் மேம்பட்ட சுகாதார சேவைகளை எமது பிராந்தியத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த காலத்தில் குறிப்பாக கொரோனா காலத்தில் இரவு பகலாக ஊடகவியலாளர்கள் பணியாற்றியதை ஞாபகப்படுத்தி நினைவு கூர்வதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது பிராந்திய சுகாதாரத்துறையின் முன்னேற்றத்திற்காக ஊடகவியலாளர்களின் ஆரோக்கியமான கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். சுகாதார மேம்பாட்டை முன்னெடுப்பதில் பல சவால்களும் உள்ளது. அந்த சவால்களை வெற்றி கொள்ள மக்களை விழிப்பூட்டுவற்காக ஊடகவியலாளர்கள் சிரத்தையுடன் பணியாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
சுகாதாரத்துறையின் எழுச்சிக்காக பல்வேறு தரப்பினருடனும் தொடரான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில்தான் பெறுமதிமிக்க ஊடகவியலாளர்களையும் சந்திக்கின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் சுகாதாரத்துறை சம்பந்தமான தமது கருத்துக்களையும் முன்வைத்தமை விசேட அம்சமாகும்.மேலும் அரச ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வைத்தியசாலைகளில் விசேட சிகிக்சை முறைமையை அறிமுகப்படுத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி வைத்தியர் ஸஹிலா இஸ்ஸதீன் மிக விரைவில் மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு அரச மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இதற்கு இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் ஊடகப்பிரிவு உத்தியோகத்தர் பாசித் முகைதீன் மற்றும் றியாஸ் ஆதம் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.