(பாறுக் ஷிஹான்) பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரிய நாயகம் சந்திர நேருவின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் வியாழக்கிழமை (8) நடைபெற்றது.
இதன் போது பெரிய நீலாவணை, மற்றும் பாண்டிருப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் புஸ்பாராஜ் துஷானந்தன் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்
அரியநாயகம் சந்திரநேரு அம்பாறை மாவட்டம், திருக்கோவிலைச் சேர்ந்தவர்.இவரது தந்தை “அறப்போர்” கே. ஏ. டபிள்யூ. அரியநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். புரட்டஸ்தாந்துக் கிறித்தவர்.
சந்திரநேரு ஆரம்பத்தில் கல்பிட்டி மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றினார். பின்னர் அரச சேவையில் இருந்து விலகி மாலைதீவுக் கப்பல் ஒன்றில் இரண்டாம் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.
ஆறு ஆண்டுகளில் கப்பல் காப்டனாக பதவி உயர்வு பெற்றார். பல ஆண்டுகள் மாலைதீவுக் கப்பலில் பணியாற்றினார். இக்காலத்தில் சிங்களப் பெண் ஒருவரைத் திருமணம் புரிந்தார்.
எண்பதுகளின் நடுப்பகுதியில் விடுமுறையில் நாடு திரும்பிய போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பூசா தடுப்பு முகாமில் ஓராண்டுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டார்.
சிறை வாழ்க்கை அவரை தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்த்தது. ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார்.
1990களில் இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெற்று திருக்கோவில் திரும்பினார். அங்கு அவர் பல கடைகளைக் கொல்வனவு செய்து தொழிலதிபரானார்.
2001 நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரநேரு அம்பாறை மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 26,282 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
2004 தேர்தலில் போட்டியிட்டு 25,572 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், 2005 பெப்ரவரி 7 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ. கௌசல்யனுடன் சந்திரநேரு பயணம் செய்த போது இவர்கள் சென்ற வாகனம் பொலன்னறுவை மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளானதில் கௌசல்யன், மற்றும் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்) ஆகிய மூன்று விடுதலைப் புலிகள், ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேரு அடுத்த நாள் பெப்ரவரி 8 காலையில் உயிரிழந்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு சந்திரநேருவிற்கு “நாட்டுப்பற்றாளர் விருது”, மற்றும் “மாமனிதர்” விருதுகளை வழங்கிக் கௌரவித்தது.
இன்று 2020, 15, வருடங்கள் கடந்தும் அவர்களின் கொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை நினைவுகள் மட்டும் தொடர்கிறது.