சங்கர்புரத்தில் ஏரி378 புதிய நெல் இன அறுவடைவிழா!

பிரதி விவசாயப் பணிப்பாளர் பரமேஸ்வரன் பங்கேற்பு.
( வி.ரி. சகாதேவராஜா)
றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சங்கர்புரம் கிராமத்தில் புதிய வெள்ளை நெல்லினமான AT 378 முன்மாதிரியாக செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை நேற்று (7) புதன்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.

றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவுக்கு பொறுப்பான விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.கிலசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவகத்தின் விவசாய ஆராய்ச்சி நிபுணர் கே.ரோகண திலகசிறி உதவி விவசாய பணிப்பாளர்களான எஸ்.சித்திரவேல் திருமதி. நித்தியா நவரூபன் ஆகியோர் அதிதிகளாகவும் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கர்புரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் மண்டூர் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
முன்மாதிரி துண்டச் செய்கையை விவசாய போதனாசிரியரின் ஆலோசனைக்கேற்ப தயாபரன் எனும் விவசாயி சிறப்பாக செய்கை பண்ணிய வயல்நிலத்தில் விவசாய உத்தியோகத்தர்களால் நெல் அறுவடை செய்யப்பட்டு பயிர்வெட்டு அளவீடு மூலம் விளைச்சல் கணிக்கப்பட்டது.
 இம்முறை சாதகமற்ற காலநிலை நிலவிய போதிலும்கூட இந்த இனமானது நோய்பீடை என்பவற்றுக்கு எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகவும் நல்ல விளைச்சலை கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் தரும் இனமாக இதனை எதிர்வரும் போகத்திலிருந்து இப்பகுதி விவசாயிகள் செய்கைபண்ண எதிர்பார்த்துள்ளனர்.