உலக வங்கியின் விவசாயத்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாயத்துறை நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (02) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு, மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாயத்துறை நவீனமயமாக்கல் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் அதன் நிலைப்பாடு குறித்து மாகாண பிரதித் திட்டப் பணிப்பாளர் ஆர். ஞானச்செல்வம் தெளிவுபடுத்தினார்.

நாட்டின் ஏழு மாவட்டங்களில் 2017ஆம் உலக வங்கியின் 63.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 2023.12.31 வரையான காலப்பகுதியில்  1464.38 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை நோக்குடன் மண்முனை தென்மேற்கு,  மண்முனைப் பற்று மற்றும் போரதீவுப் பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழை, நிலக்கடலை, மாதுளை, வெள்ளரிக்காய் போன்ற உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்காக திட்டப் பணிகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள்  திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி,  உட்கட்டமைப்பு வசதிகள், நீர்ப்பாசனம், விதை, பயிர் நடுகை, உற்பத்தி அறுவடை மற்றும் பெறுமதி சேர் செயற்பாடுகளுக்கான இயந்திரங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், திட்ட முகாமைத்துவமும் மேற்பார்வை  போன்ற உதவிகள் அளிக்கப்படுகின்றன.

அந்தவகையில் வாகரையில் 500 ஏக்கரில் 500 விவசாயிகளைக் கொண்டு வெள்ளரிக்காய் உற்பத்தி 121.42 மில்லியன் ரூபா இலாபமீட்டப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அறிக்கைக்கு இணங்க நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 2023 மே மாதம் வரை 42.8 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது.

100 விவசாயிகளினால் 50 ஏக்கரில் பச்சை மிளகாய் உற்பத்தி களுதாவளையில் மேற்கொள்ளப்படுவதுடன் 332.43 மில்லியன் ரூபா வருமானமும், செட்டிப்பாளையம் மற்றும் மான்காடு பகுதியில் இதே அளவில் காய்ந்த மிளகாய் உற்பத்தி இடம்பெறுவதுடன் இது வரை 230.75 மில்லியன் ரூபா இலாபமும் ஈட்டப்பட்டுள்ளது.
100 ஏக்கர் நிலத்தில் 100 விவசாயிகளினால் 950கிலோ நிலக்கடலை வாகரை மற்றும் கதிரவெளியில் உற்பத்தி செய்யப்பட்டு கடந்த பத்துப் பருவங்களில் 304.99 மில்லியன் ரூபாவும், கரடியனாறுப் பகுதியில் கடந்த ஏழு பருவங்களில் 389.8 மில்லியன் ரூபாவும் வருமானம் பெறப்பட்டுள்ளது.

வெல்லாவெளியில் 500 விவசாயிகளால் 250 ஏக்கரில் 801 மெற்றிக் தொன் காவந்திஸ் வகை வாழை உற்பத்தியினால் 69.55 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்துடன் தலா 150மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்புடன் களுவாஞ்சிகுடி மற்றும் செங்கலடியில் மாதுளை  உற்பத்தி இடம்பெற்று வருகின்றது. இவற்றிற்கிணங்க இவ்விவசாயத் துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தினால் 2190.17 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களான ரி. நிர்மலராஜ், வி. நவநீதன், மாவட்ட விவசாய மேற்பார்வை அதிகாரி சி. தனிநாயகம், திட்டத்தின் விவசாய விஞ்ஞானி அ. அருனந்தி மற்றும் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், விவசாய மற்றும் நீர்ப்பாசனத்  திணைக்களங்களின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், திட்டத்தின் பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.